உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்திலேயே தே.மு.தி.க தொண்டர்கள் இல்லை. ஆனால், ' அனைத்து வேட்பாளர்களையும் தி.மு.க அறிவிப்பதற்குள், நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்ற முடிவில் தீவிரமாக இருக்கிறார் விஜயகாந்த்.
தமிழக அரசியல் கட்சிகள் சுதாரித்து எழுவதற்குள், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுவிட்டது தேர்தல் ஆணையம். அதனைத் தொடர்ந்து வேட்பாளர் பட்டியலையும் அறிவித்துவிட்டது அ.தி.மு.க. இன்று முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்திருக்கிறது தி.மு.க. அதேபோல், மக்கள் நலக் கூட்டணியின் முதல்கட்ட தொகுதிப் பங்கீடும் வெளியிடப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தல் களத்தில் தே.மு.தி.க என்ற கட்சியே இருப்பதுபோல் தெரியவில்லை. " கட்சித் தலைமை எங்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால், போட்டியிடுங்கள் என்று வற்புறுத்தாமல் இருந்தால்போதும்" என ஆதங்கப்படுகிறார் கொங்கு மண்டல தே.மு.தி.க நிர்வாகி ஒருவர். அவர் நம்மிடம்,
" கடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகப்படியான ஓட்டுக்களை தே.மு.தி.க குவித்தது. கவுன்சிலர் இடங்களுக்குப் போட்டியிடுவதில் பெரிய தகராறே வெடித்தது. அந்தளவுக்குக் கட்சி பலமாக இருந்தது. ' தேர்தலில் போட்டியிட்டே ஆக வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் விஜயகாந்த். ஆனால், அதற்குரிய வேட்பாளர்கள் கிடைக்காமல் தடுமாறி வருகிறோம். நேற்று தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி எங்களிடம், ' நாளை மாலைக்குள் விருப்பமனு கொடுத்தவர்கள் பட்டியலை அனுப்பிவிடுங்கள். தி.மு.க முழுப் பட்டியலையும் வெளியிடுவதற்குள் நாம் முந்திக்கொள்ள வேண்டும்' எனக் கட்டாயப்படுத்தினார். அதற்கு நாங்கள், ' மனு கொடுத்தவர்கள்கூட போட்டியிடத் தயங்குகிறார்கள். பலபேர் விருப்பமனுவுக்கு பணம் செலுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களைக் கட்டாயப்படுத்த முடியவில்லை' எனச் சொன்னோம். ' விருப்பமனுவுக்குப் பணமே வாங்க வேண்டாம். எப்படியாவது பட்டியலைத் தயாரித்து அனுப்பிவிடுங்கள். கேப்டன் அவசரப்படுத்துகிறார்' எனக் கேட்டுக் கொண்டார்.
இந்தளவுக்குக் கட்சியின் வளர்ச்சி அதல பாதாளத்திற்குப் போகும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அனைவரும் தி.மு.க கூடாரத்திற்குச் சென்றுவிட்டனர். இப்போது பார்த்தசாரதியும் இளங்கோவனும் மட்டுமே கட்சிப் பணியை கவனிக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் கேப்டன் கவலைப்படுவதாக இல்லை. பிரேமலதாவோ, ' கட்சியை விட்டுப் போகிறவர்கள் போகட்டும். நம்மைச் சுற்றி நல்லவர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். நமக்கு நல்ல நேரம் வந்துவிட்டது' என கேப்டனிடம் பேசியிருக்கிறார். அவரும், ' உண்மைதான். நாம் பதவியில் உட்கார்ந்துவிட்டால், நம்மைத் தேடி அனைவரும் வந்துவிடுவார்கள்' என விவரித்திருக்கிறார். உண்மையில், தமிழ்நாட்டில் நிலைமை தெரியாமல் இவர்கள் பேசிக் கொள்கிறார்களா என்றும் தெரியவில்லை.
ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா முப்பது பேர் மட்டுமே போட்டியிட மனு கொடுத்திருக்கிறார்கள். இவர்களில் எத்தனை பேர் மனுவை வாபஸ் வாங்கிக் கொள்வார்களோ தெரியவில்லை. மாநகராட்சிகளின் 900 கவுன்சிலர் பதவிகளும் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிகளில் 600-க்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. இவற்றில், 25 சதவீத அளவுக்கு மட்டுமே, எங்களால் வேட்பாளர்களை அறிவிக்க முடியும். ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் சமபலத்தில் இருக்கின்றன. தே.மு.தி.க என்ற கட்சி இருப்பதையே மக்கள் மறந்து வருகிறார்கள். அதை உணர்ந்து கொண்டு கட்சியை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளில் தலைமை ஈடுபடவில்லை. மாநகராட்சிகளின் அனைத்து வார்டுகளுக்கும் போட்டியிடுவதற்கு ஆட்கள் இல்லை. ' போட்டியிடுவற்கு யார் வந்தாலும் சீட் கொடுத்துவிடுங்கள்' என்கின்றனர். அப்படி யாராவது விருப்பப்பட்டு வருகிறார்களா எனத் தேடிக் கொண்டிருக்கிறோம்" என்றார் நொந்துபோய்.