Showing posts with label கல்வி. Show all posts
Showing posts with label கல்வி. Show all posts

Wednesday, 29 June 2016

முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் பெறுவது எப்படி?


தமிழக அரசு, தொழிற்கல்வி படிப்பதை ஊக்குவிப்பதற்காக ஒரு குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி ஆகும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் ஏற்றுக்கொண்டு வருகிறது. கடந்த 2010ம் வருடத்திலிருந்து இதற்கென தனி அரசாணை பிறப்பித்து இந்தச் சலுகையை மாணவர்களுக்கு அளித்து வருகிறது.
அந்த அரசாணையில், ‘அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளிலும், மருத்துவக் கல்லூரிகளிலும், பல், கால்நடை மருத்துவக் கல்லூரிகளிலும், வேளாண் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும், ஒற்றைச் சாளர முறையில் சேர்க்கை பெறும் மாணவர்களின் குடும்பத்தில் இதுவரை யாரும் பட்டதாரிகளே இல்லையெனில் எந்தச் சாதிபாகுபாடுமின்றி, வருமானத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும்’ என குறிப்பிட்டுள்ளது. அதாவது அந்த மாணவ-மாணவியின் ‘டியூஷன் ஃபீஸ்’ எனப்படும் கல்விக் கட்டணத்தை மட்டுமே அரசு செலுத்தும்.
இந்தக் கல்விச் சலுகைக்குத் தகுதியுள்ள மாணவர்கள், ‘முதல் தலைமுறை பட்டதாரி’ என்கிற சான்றிதழை அரசிடம் பெற்று கல்லூரி விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டியது அவசியம். இந்தச் சான்றிதழைப் பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழுக்கான விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட தாசில்தார் அலுவலகங்கள் அருகிலுள்ள கடைகளில் கிடைக்கும்.
அல்லது இணையத்தின் வழியாகவும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். விண்ணப்பம் தாசில்தார் நேரடியாக கையொப்பமிட்டு சான்றிதழ் வழங்கும் வகையிலேயே இருக்கும். ஆனால், இதில் உங்கள் பெயர், தந்தை, தாய் பெயர், பிறகு உங்கள் தந்தையின் அப்பா, அம்மா பெயர்கள்(தாத்தா, பாட்டி), அம்மாவின் அப்பா, அம்மாவின் பெயர்கள், உடன்பிறந்தவர்களின் பெயர்கள், அவர்களின் வயது ஆகியவற்றை எழுதி, அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
பிறகு இதனுடன், உறுதிமொழி விண்ணப்பம் ஒன்றையும் இணைத்து கொடுக்க வேண்டும். அதில், ‘குடும்பத்தில் யாரும் பட்டதாரிகள் இல்லையென உறுதி அளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கும் பகுதியின் கீழ் உங்கள் கையெழுத்தும், அதன்கீழ் பெற்றோர், கையொப்பத்தையும் இடவேண்டும். ஏனெனில், தாத்தா, பாட்டியின் கல்வித் தகுதியை அதிகாரிகளால் விசாரிக்க முடியாமல் போகலாம். அதற்காக பெற்றோர் கையொப்பமிட்ட உறுதிமொழிச் சான்று அவசியமாகிறது. நிறைவில் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், சரி பார்ப்பிற்குப் பிறகு தாசில்தாரிடம் கையொப்பம் பெற்று சான்றிதழைப் பெறவேண்டும்.
தந்தை, தாய், உடன்பிறந்தவர்கள் ஆகியோரின் பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகல் இதனுடன் இணைக்கப்பட வேண்டியது அவசியம். ஏழு நாட்களில் இந்த சான்றிதழ் கிடைத்து விடும். தாமதமானால் வருவாய் அலுவலரான டி.ஆர்.ஓ.,வை அணுகி முறையிடலாம். அல்லது மாவட்ட கலெக்டரை அணுகலாம். மாணவன் தரும் உறுதிமொழி சான்றிதழ் தவறானது எனத் தெரியவந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இருக்கிறது. மாணவர் படித்து முடித்த பின்னர் உறுதிமொழிச் சான்றிதழ் தவறு எனத் தெரிய வந்தாலும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்கிறது, தமிழக அரசின் அரசாணை.
அண்ணா பல்கலையில்,இந்த ஆண்டில் மட்டும் 25 ஆயிரம் மாணவியர் உட்பட, 71 ஆயிரம் பேர், இன்ஜி., கவுன்சிலிங்குக்கு, முதல் தலைமுறை பட்டதாரிகளாக பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தினகரன்-28/6/2016

Sunday, 17 April 2016

ஆன்லைனில் இன்ஜினியரிங் விண்ணப்பம் : நகர, கிராமபுற மாணவர்கள் கடும் அவதி


* மின்வெட்டு, இன்டர்நெட் சென்டர் இல்லாமை 
* வெகுதூரத்தில் சேவை மையங்கள் 
சென்னை : இன்ஜினியரிங் படிப்பில் சேர ஆன்லைன் மூலமாகத்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளதால் நகர, கிராமபுற மாணவர்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். காரணம் மின்வெட்டு, இன்டர்நெட் சேவை மையங்கள் குறைவு, பஸ் வசதி குறைவு மற்றும் சேவை மையங்கள் வெகுதொலைவில் இருப்பது போன்ற காரணங்களால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார், சுயநிதி இன்ஜினியரிங் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான சேர்க்கை ஒற்றை சாளர முறையில் வழக்கம் போல் அண்ணா பல்கலைகழகம் மூலம் நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்ஜினியரிங் படிப்புக்கு இந்த முறை இணையதளம் (ஆன்லைன்) மூலமாகதான் விண்ணப்பிக்க முடியும். விண்ணப்ப படிவங்கள் வாங்கி பூர்த்தி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. கேட்பதற்கு எளிதாக தெரியும் இந்த புதிய முறையால் கிராமபுற மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கம்ப்யூட்டர் வசதி குறைவு: தமிழகத்தில் எல்லோரது வீட்டிலும் கம்ப்யூட்டர் கிடையாது. இருப்பவர்கள் வீட்டிலும் இணைய இணைப்பு வசதி இல்லை. இந்த நிலையில் இன்ஜினியரிங் கலந்தாய்வில் கலந்துக் கொள்ள விண்ணப்பிக்க வேண்டும் என்றால் தனியார் இணைய மையங்களை நாட வேண்டியுள்ளது.
கட்டணம் அதிகம்.. க்யூவும் அதிகம்: தனியார் மையங்களில் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய குறைந்தது 100 ரூபாய் வாங்குகின்றனர். புகைப்படங்களை நகலெடுக்க தனிக் கட்டணம். அதேபோல் விண்ணப்பத்துடன் பொதுபிரிவினர் 500 ரூபாயும், தாழ்த்தப்பட்டவர்கள் 250 ரூபாயும் கட்டணமாக செலுத்த வங்கிகளை நாடினால் கட்டணத்துடன் கூடுதலாக தரகு கட்டணம் 45 ரூபாய் செலுத்த வேண்டும். மேலும் ஒரு சென்டரில் ஒருவரே இருப்பதாலும் அவருக்கு இதில் அனுபவம் குறைவு என்பதாலும் ஒருவர் விண்ணப்பிக்க பல மணிநேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. வெறும் 12 ரூபாயில் கட்டணம் மட்டும் செலுத்த வேண்டும் என்றால் கிரடிட், டெபிட் கார்டு வைத்திருக்க வேண்டும். அல்லது வங்கிக் கணக்கிற்கு இணைய பயன்பாட்டு வசதி இருக்க வேண்டும். இதெல்லாம் கிராமபுற மக்களுக்கு மட்டுமல்ல, நகர்புறங்களில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கும் தொல்லைதான் என்று தகவல் பரவியது.
ஈ மொய்க்கும் ஈ சேவை மையங்கள்: தமிழக அரசின் ஈ சேவை மையங்கள் மூலம் பணம் செலுத்தலாம் என்று பல்கலைக்கழக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2 நாட்களில் தமிழகத்தில் உள்ள பல ஈ சேவை மையங்களில் ஆட்கள் இல்லாமல் இருக்கின்றனர். கேட்டால் தேர்தல் பணிக்காக சென்றுள்ளனர் என்கிறார்கள். அதனால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.இத்தனையும் சமாளித்து இணையத்தில் விண்ணப்பித்து விட்டாலும் பிரச்னை முடியாது. மேலும் ஈ சேவை மையங்கள் விடுமுறை காலங்களில் இயங்குவதில்லை. அரசு மருத்துவமனைப் போல இங்கும் இழுத்தடிப்பு வேலைகள்தான் நடக்கிறது. மேலும் ஒரு பகுதியில் ஒரு ஈ சேவை மையம் இருப்பதால் பலரும் இங்கே வருவதால் ஒரு மாணவன் ஒரு நாள் இங்கேயே முடங்கிக் கிடக்க வேண்டி உள்ளது.
ஒன்றுக்கு இரண்டு வேலை: இணையத்தில் விண்ணப்பித்ததை அச்செடுத்து, அத்துடன் விண்ணப்பக் கட்டணத்திற்கான வரைவோலை, 10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ் உட்பட 10 வகையாக சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பொறியியல் சேர்க்கை மையத்திற்கு நேரிடையாகவோ, அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
இணையதளம் மூலமாக விண்ணப்பித்தாலும், அதனை அச்செடுத்து , நகல்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் என்றால் இணையதளம் மூலமாக விண்ணப்பிப்பதால் மாணவர்களுக்கு என்ன பலன் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 59 மையங்கள் மூலம் பொறியியல் சேர்க்கை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. அப்போது விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். இப்போதும் விண்ணப்பக்கட்டணம் 500 ரூபாய். கூடவே வரைவோலை(டிடி) எடுக்க 45 ரூபாய். இது தவிர தனியார் இணைய மையங்கள் மூலம் விண்ணப்பிக்க 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்். அதன்பிறகு விண்ணப்பபடிவத்தை அச்செடுக்க கட்டணம் குறைந்தபட்சம் 50 ரூபாய். பஸ் கட்டணம், பெண் பிள்ளைகளாக இருந்தால் அன்று அவரின் தந்தையின் தினசரி கூலி காலி என்று ஆன்லைன் முறையில் விண்ணப்பிப்பதால் மாணவர்களுக்கு பல மடங்கு செலவு. அலைச்சல்.
மின்வெட்டு: மேலும், கிராமங்கள், பேரூராட்சி மற்றும் நகர்புறங்களில் எப்போது மின்சாரம் போகும் எப்போது வரும் என்று தெரியாத நிலை. இந்தப் பகுதியில் உள்ள இன்டர்நெட் சென்டர்களின் எண்ணிக்கையும் மிகவும் குறைவு. எனவே, இன்டர்நெட்சென்டர்களை தேடி அலைந்து திரிய வேண்டி இருக்கிறது. அப்படியே ெசன்றாலும் அந்த மையத்தின் ஸ்பீடு குறைவாக இருப்பதால் வெகு நேரமாகிறது. எனவே, காலத்திற்கு ஏற்ப விண்ணப்பிக்கும் முறையிலும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவது வரவேற்க தகுந்ததுதான். ஆனால் அது ஏழை, எளிய, கிராமபுற மக்களை பாதிப்பதாக இருக்கக்கூடாது. ஆனால் இங்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் வசதியை மட்டும் கருத்தில் கொண்டு ஆன்லைன் முறையை அறிமுகப்படுத்தியள்ளனர். இதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கு பணிச்சுமை குறையும். மாணவர்களுக்கு அவதி.
மருத்துவதுறை எஸ்கேப்
மருத்துவ படிப்பிற்கான சேர்க்கைக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறையை அமல்படுத்த மாட்ேடாம். அதனால் கிராமபுற மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 1.19 லட்சம் இடங்களுக்கு ஆள் இல்லை
கடந்த ஆண்டு மொத்தமிருந்த 2,88,681 அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 1,79,796 இடங்கள் மட்டுமே நிரப்பின. மீதியிருந்த சுமார் 42 சதவீத இடங்கள் அதாவது 1,18,887 இடங்கள் காலியாக இருந்தன.

Thursday, 7 January 2016

என்ஜினீயரிங் மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றம்; கிரேடு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது


4:01 AM | ஜனவரி 08, 2016

சென்னை, 

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு அனைத்து பருவங்களிலும் பாடத்திட்டம் புதிய தொழில் நுட்பத்துடன் மாற்றப்பட்டு உள்ளது. மார்க் போடும் கிரேடு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. 

பாடத்திட்டம் மாற்றம்

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி, ஏ.சி.தொழில் நுட்ப என்ஜினீயரிங் கல்லூரி, கட்டிடக்கலை கல்லூரி, குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரி ஆகிய 4 கல்லூரிகளுக்கும் பாடத்திட்டம் மாற்றி 4 வருடம் ஆகிவிட்டது. 

இதையொட்டி நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்பவும், மேல்நாட்டில் உள்ள பாடத்திட்டத்தை பார்த்தும் அதற்கு ஏற்றபடியும் என்ஜினீயரிங் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டது. அதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. 

ஆனால் கல்விக்குழுவின் அனுமதி பெற்ற பிறகுதான் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த முடியும். 

கல்விக்குழு கூட்டம்

இந்தநிலையில் அண்ணா பல்கலைக்கழக கல்விக்குழு கூட்டம் நேற்று அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் துணை வேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய பாடத்திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி வருகிற கல்வி ஆண்டில் இருந்து பி.இ., பி.ஆர்க். முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3-வது செமஸ்டர் முதல் 8-வது செமஸ்டர் வரை பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. 

தற்போது பிளஸ்-2 படிக்கும் மாணவர்களில் ஏராளமானோர் வருகிற ஆகஸ்டு மாதம் என்ஜினீயரிங் படிப்பில் சேர உள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள இந்த 4 கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு அனைத்து செமஸ்டர்களிலும் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படுகிறது.

கிரேடு முறையில் மாற்றம்

மேலும் மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் இப்போது கிரேடு முறை உள்ளது. அந்த கிரேடு முறையிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. 

ஒரு வகுப்பில் செமஸ்டர் தேர்வில் அந்த வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்கள் பெறும் சராசரி மற்றும் கூடுதல் மதிப்பெண்களை கொண்டு கிரேடு தயாரிக்கப்படும். கிரேடு முறை வகுப்புக்கு வகுப்பு மாறும். செமஸ்டருக்கு செமஸ்டர் மாறும். இந்த புதிய முறை இந்த 4 கல்லூரிகளில் மட்டும்தான் முதலில் அமல்படுத்தப்படுகிறது. இந்த கல்வி வருடம்(2015-2016) சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு அமல்படுத்தப்படுகிறது. 

இந்த தகவலை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மு.ராஜாராம் தெரிவித்தார்