ஹஜ் (Hajj) என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணமாகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வயதுவந்த, உடல் நலமும், பணவசதியும் உள்ள ஒவ்வொரு முஸ்லிம்களின் ஹஜ் பயணமும் கடமையாக்கப்பட்டுள்ளது.
ஹஜ் கடமையின் ஒவ்வொரு வழிபாடும் நபி இப்ராஹிம் (அலை) அவர்களையும், அவர்களின் மனைவி ஹாஜரா (அலை) அவர்களையும், மகன் இஸ்மாயில் (அலை) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூருவதாக அமைகின்றது.
ஹஜ் செல்பவர்கள் துல்ஹஜ் பிறை 8ஆம் நாள் மினாவிற்குச் செல்ல வேண்டும். துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் சூரியன் உதித்த பின் அரஃபா செல்ல வேண்டும். அரஃபாவுடைய தினம், மிக சிறப்பான தினமாகும். துல் ஹஜ் பிறை 10ஆம் நாள் சூரியன் உதயமாகுவதற்கு முன் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்பட்டு மினா வர வேண்டும்.
10ஆம் நாள் மினாவில் செய்யும் நான்கு அமல்கள். ஜம்ரத்துல் அக்பாவிற்கு மாத்திரம் ஏழு கற்களை வீச வேண்டும், கல் எறிந்ததற்குப் பிறகு குர்பானி கொடுக்க வேண்டும். அதாவது ஒட்டகம், மாடு, ஆடு இவைகளில் ஒன்றை அல்லாஹ்விற்காக அறுப்பதாகும்.
குர்பானி கொடுத்த பின் தலை முடியை எடுத்து, குளித்து மணம்பூசி தனது வழமையான ஆடையை அணிந்து கொண்டு தவாபுல் இஃபாலா செய்வதற்காக மக்கா செல்ல வேண்டும்.
11ஆம் நாள் ளுஹருடைய நேரம் வந்ததிலிருந்து சூரியன் மறைவதற்கு முன் மூன்று ஜம்ராக்களுக்கும் முறையே ஏழு கற்கள் வீதம் எறிய வேண்டும். 12ஆம் இரவும் மினாவில் தங்குவது அவசியமாகும்.
12ஆம் நாளும் மூன்று ஜம்ராக்களுக்கும் ளுஹர் தொழுகையின் பின் கல் எறிய வேண்டும். 12ஆம் நாளோடு ஹஜ் கடமையை முடித்துவிட்டுச் செல்ல விரும்புபவர்கள் சூரியன் மறைவதற்கு முன் மினா எல்லையை விட்டும் வெளியாகிவிட வேண்டும்.
ஹஜ் கடமையை முடித்துவிட்டு தன் வீடு செல்ல விரும்புபவர்கள் கடைசியாகச் செய்யும் அமல் தவாபுல் வதாவாகும். தவாபுல் வதா என்பது கஃபத்துல்லாவிலிருந்து விடை பெற்றுச் செல்லும் தவாபாகும். அதுவே ஹஜ் செய்பவரின் கடைசி அமலாகும்.
புனித ஹஜ்ஜை நிறைவேற்ற இந்த வருடம் ஹஜ் செய்தோர் எண்ணிக்கை 18,62,909 (பதினெட்டு இலட்சத்து அறுபத்தி இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது). 2012ம் ஆண்டு 31 இலட்சம் பேர் ஹஜ் செய்ததே கடந்த பத்து ஆண்டுகளில் அதிகபட்சம் ஆகும் என சவூதி அரசாங்கம் தங்களின் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
தகவல்: சவூதி அரசாங்கம்
No comments:
Post a Comment