அறந்தாங்கி அருகே இரண்டரை வயது குழந்தையை தாயே கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மூக்குடி கிராமத்தில் தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த முத்தையா-கலா தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ஆண் குழந்தை இல்லை என்ற ஏக்கத்தில், அனைக்கட்டு கிராமத்திலிருந்து 1வயது ஆண்குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
நேற்று முன்தினம், வீட்டிற்குள் வளர்ப்பு மகன் தினேஷ் மலம் கழித்திருந்ததை பார்த்து, ஆத்திரமடைந்த கலா, குழந்தையை பிரம்பால் அடித்துள்ளார். வலி தாங்காமல், கதறி அழுத குழந்தை தினேஷ் சிறிது நேரத்தில் துடிதுடித்து மயக்கமடைந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த கலா, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் உதவியுடன், குழந்தை தினேஷின் உடலை தனது சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் அணைக்கட்டு கிராமத்திற்கு கொண்டுசென்ற கலா, யாருக்கும் தெரியாமல் புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
குழந்தையை 3 நாள்களாக காணாததால், சந்தேகமடைந்த மூக்குடி கிராமத்தினர் அளித்த புகாரின் பேரில், கலாவை கைது செய்த போலீசார், குழந்தையை கொலை செய்து புதைத்தது அவர் தான் என்பதை உறுதிசெய்தனர். இந்த சம்பவம் மூக்குடி கிராமத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment