Tuesday, 15 March 2016

புதுப்பட்டினத்தை அடுத்த சேதுபாவாசத்திரத்தில் மாட்டுவண்டிகள் மீது லாரி மோதி 6 பேர் காயம் :: காயம்பட்டவர்கள் பேராவூரணி அரசுப்பொதுமருத்துவமனையிலிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் அனுமதி.


புதுப்பட்டினத்தை அடுத்த சேதுபாவாசத்திரம் அருகே லாரி மோதி 2 மாட்டுவண்டிகள் நொறுங்கின. இதில் சிறுவன் உள்பட 6 பேர் படுகாயமடைந்தனர்.
சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சம்பைப்பட்டிணம் மறவன்வயல் பகுதியைச் சேர்ந்த அய்யப்பன் (35), மலர் (28), இவரது மகன் சின்னராஜ் (7), ராஜேந்திரன்(45), கருப்பையா (45), தம்பி மரைக்காயர் (55) ஆகிய 6 பேரும் இரண்டு மாட்டு வண்டிகளில் வைக்கோல் ஏற்றுவதற்காக நேற்று அதிகாலை 4 மணியளவில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சேதுபாவாசத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ராமநாதபுரம் பகுதியிலிருந்து செங்கல் சூளைக்கு பனைமரம் ஏற்றிக்கொண்டு வந்த
அடையாளம் தெரியாத லாரி மாட்டு வண்டிகளின் பின்புறத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் 2 வண்டிகளில் இருந்த 6 பேரும் பலத்த காயமடைந்தனர்.
உடனடியாக அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் பேராவூரணி காமராஜர் அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு முதலுதவி செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
லாரி மோதியதில்  மாட்டுவண்டிகள் சுக்குநூறாக உடைந்தன. 4 மாடுகளும் காயமடைந்தன. இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment