மும்பை: கடன் வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்த மாற்றமும் செய்யவில்லை. மத்திய அரசு பட்ஜெட்டை தொடர்ந்து, அதற்கேற்ப அடுத்த நிதிக்கொள்கை அறிக்கையில் வட்டி குறைப்பு பற்றி முடிவு செய்யப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதில் வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகியகால கடன் வட்டி உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் இறுதியாக நிதிக்கொள்கை மறு சீராய்வு அறிக்கையை ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டது. இதில் கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை. இதன்படி வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால ரெப்போ வட்டி 6.
75 சதவீதமாகவே நீடிக்கிறது. இதுபோல் சிஆர்ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதம் 4 சதவீதமாகவே உள்ளது.நிதிக்கொள்கை அறிக்கைைய வெளியிட்டு ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் கூறுகையில், ''வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. மத்திய அரசு இந்த மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டை பொறுத்து அடுத்த நிதிக்கொள்கை அறிக்கையில் வட்டி விகிதம் முடிவு செய்யப்படும். 2017ம் ஆண்டுக்குள் பண வீக்கம் 5 சதவீதத்துக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல், பொருளாதார வளர்ச்சி 2016 நிதியாண்டில் 7.4 சதவீதமாகவும், 2017 நிதியாண்டில் 7.6 சதவீதமாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரபி பருவ அறுவடை மெதுவாக முன்னேற்றம் அடையும்'' என்றார்.ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டில் வட்டி விகிதத்தை 1.25 சதவீதம் குறைத்தது. தற்போது ரெப்போ வட்டி 6.75 சதவீதமாக இருக்கிறது. தொழில் வளர்ச்சிக்கான வியூகங்களை மத்திய அரசு வகுத்துவரும் நிலையில், இதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் வட்டி விகிதம் குறைக்கப்படும் என தொழில்துறையினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எதிர்பாராத நேரத்தில் வட்டியை குறைத்த ரிசர்வ் வங்கி தற்போது எந்த மாற்றமும் செய்யாததால் தொழில்துறையினர் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்.இருப்பினும் மத்திய அரசு பட்ஜெட்டில் வெளியிடும் அறிவிப்புகளை பொறுத்து அடுத்ததாக ஏப்ரல் 5ம் தேதி வெளியிடும் நிதிக்கொள்கை அறிக்கையில், வரும் நிதியாண்டின் முதல் அறிக்கை என்பதால் வட்டி குறைப்பு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment