Thursday, 11 February 2016

மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு கூடாது: மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்



சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜ அரசு நாடு முழுவதும் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப்படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான முயற்சியில் மீண்டும் இறங்கி உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் இந்திய மருத்துவக் கழகத்தின் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த வழக்குகளை விசாரித்த மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில், இரண்டு நீதிபதிகள் இந்திய மருத்துவக் கழகம் பொது நுழைவுத் தேர்வு நடத்தத் தேவையில்லை என்று தீர்ப்பு அளித்தனர்.இந்நிலையில் மத்திய அரசு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அலட்சியப்படுத்திவிட்டு மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த முயற்சிப்பது கண்டனத்துக்குரியது. பாஜ அரசு சமூக நீதி மற்றும் மாநில சுயாட்சிக்கு எதிரான வகையில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment