தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தனியொரு புகழ் சேர்த்துவரும் மகாமக விழாவின் அன்னதானத்துக்காக இஸ்லாமிய தொழிலதிபர் வழங்கிய 1100 அரிசி மூட்டைகளையும், 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களையும் அவர் சார்பில் தமாகா மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார் பல்வேறு அமைப்புகளுக்கு சனிக்கிழமை வழங்கினார்.
கும்பகோணத்தில் நடைபெறும் மகாமகத்திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் வகையில், கும்பகோணத்தைச் சேர்ந்தவரும், தொழில் அதிபருமான ஒயிட் ஹவுஸ் அப்துல்பாரி இலவசமாக 1,100 அரிசி மூட்டைகளையும், 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களையும் வழங்க முடிவு செய்தார்.
இந்நிலையில் மகாமகவிழாவின் போது அன்னதானம் செய்பவர்களுக்கு அரிசி மூட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி கும்பகோணம் மகாமகக் குளம் ராயாகிராண்ட் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு திருவையாறு தியாகபிரம்ம மகோத்சவசபா தலைவரும், தமாகா மாநிலசெயற்குழு உறுப்பினருமான ஜி.ஆர்.மூப்பனார் தலைமை வகித்தார். தொழிலதிபர் அப்துல்பாரி, ஜி.சந்திரசேகரமூப்பனார், ராயாகோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கும்பகோணம் ஒயிட் ஹவுஸ் உரிமையாளர் அப்துல்பாரி வழங்கிய 1100 அரிசி மூட்டைகளையும், 1 லட்சம் தண்ணீர் பாட்டில்களையும் அவரின் சார்பில், மாநிலசெயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார், தமிழ்நாடு பிராமணர் சங்கத்துக்கு 500 அரிசி மூட்டைகளையும், 20 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களையும், இஸ்கான் அமைப்புக்கு 300 அரிசி மூட்டைகளையும், 50 ஆயிரம் தண்ணீர் பாட்டில்களையும் என பல்வேறு அமைப்புகளுக்கு அரிசி மூட்டைகளும், தண்ணீர் பாட்டில்களையும் பிரித்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமாகா நகரத்தலைவர் பி.எஸ்.சங்கர், மாநிலசெயலர் அசோக்குமார், இணைச் செயலர் சாதிக்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment