Friday, 12 February 2016

ஜெயலலிதா பிறந்தநாள் விழா பேனரை அகற்றிய இன்ஸ்பெக்டரை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்த அதிமுக நிர்வாகி



நாகர்கோவில்: களியக்காவிளை பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த அதிமுக பேனரை அகற்றிய இன்ஸ்பெக்டரை அதிமுக ஒன்றிய செயலாளர் செல்போனில் மிரட்டிய உரையாடல் வாட்ஸ் அப் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொது செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா தனது 68வது பிறந்தநாள் விழாவை வருகிற 24ம்தேதி கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் விதிமுறைகளுக்கு மாறாக கட் அவுட், பேனர்கள் வைத்துள்ளனர். இதனால் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் பெரும் இடையூறாக இருந்து வருகிறது. குமரி மாவட்டத்திலும் விதிமுறைகளுக்கு மாறாக பல்வேறு இடங்களில் அதிமுகவினர் பேனர்கள் வைத்துள்ளனர்.
இதில் குமரி மாவட்டம் களியக்காவிளை பஸ் நிலையம் அருகில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அதிமுகவினர் மெகா சைஸ் பேனர் வைத்து இருந்தனர். இதனால் அருகில் உள்ள பயணிகள் நிழற்குடையில் பயணிகள் நிற்க முடியாத நிலையும் இருந்தது. இது பற்றி காவல் துறைக்கும் பல்வேறு புகார்கள் வந்தன.
பேனர் வைத்து இருந்த அதிமுக நிர்வாகிகளிடம் அதை மாற்று இடத்தில் வைக்குமாறு களியக்காவிளை இன்ஸ்பெக்டர் சாம்சன் பலமுறை வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆனால் அதிமுகவினர் அந்த பேனரை அகற்ற முடியாது என கூறி விட்டனர். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு ரோந்து பணியில் இருந்த போது, இன்ஸ்பெக்டர் சாம்சன் தலைமையிலான போலீசார் அந்த பேனரை அகற்றினர். பின்னர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிர்வாகிக்கும் தகவல் தெரிவித்து, பேனரை பத்திரமாக இறக்கி வைத்து இருக்கிறோம்.
நீங்கள் வந்து வாங்கி கொள்ளுங்கள் என கூறி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலையில், மேல்புறம் ஒன்றிய அதிமுக செயலாளர் உதயகுமார், இன்ஸ்பெக்டர் சாம்சனுக்கு செல்போனில் பேசி உள்ளார். அப்போது இன்ஸ்பெக்டர் என்று கூட பாராமல், எங்கள் அம்மா பேனரை நீ எப்படி அகற்றுவாய் என கூறி இன்ஸ்பெக்டரை கண்டபடி ஒருமையில் பேசி திட்டினார். அம்மா பேனரை அகற்றி விட்டாய். எனக்கு ரத்தம் கொதிக்கிறது. நேரில் வந்தால் உன்னை என்ன செய்வேன் என தெரியுமா?
எனது பேரூராட்சிக்குள் பேனரை வைக்க நான் யாரிடம் அனுமதி கேட்க வேண்டும் என்றெல்லாம் தாறுமாறாக போனில் உதயகுமார் மிரட்டுகிறார். இன்ஸ்பெக்டரும் முதலில் பொறுமையாக தனது பதிலை கூறினார். ஆனால் உதயகுமார் ஒருமையில் பேசியதால் ஆத்திரம் அடைந்து அவரும் பதிலுக்கு பதில் பேசி, உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என கூறி உள்ளார். பின்னர் இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மராஜன் நேற்று தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க சென்னை சென்று இருந்தார்.
இதனால் அவரின் உத்தரவுக்காக போலீசார் காத்து இருக்கிறார்கள். இதற்கிடையே உதயகுமார், இன்ஸ்பெக்டர் சாம்சனை போனில் மிரட்டி ஆபாசமாக பேசிய உரையாடல் விவகாரம் வாட்ஸ் அப்பில் நேற்று மாலை முதல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உதயகுமாரின் மனைவி ஆஷா டயானா, களியக்காவிளை பேரூராட்சி தலைவியாகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காவல்துறையினர் தரப்பில் கேட்ட போது, களியக்காவிளை பஸ் நிலையத்துக்குள் திரும்பும் இடத்தில் பேனர் வைத்துள்ளார்கள். இதனால் பஸ்கள் வந்து செல்ல முடிய வில்லை. பயணிகளும் பெரும் பாதிப்படைகிறார்கள். இதனால் தான் அந்த பேனரை அகற்ற வேண்டிய நிைல வந்தது. மற்றபடி அவர்கள் களியக்காவிளை பேரூராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் வைத்துள்ள பேனர்களை நாங்கள் எதுவும் செய்ய வில்லை என்றனர்

No comments:

Post a Comment