நெல்லை: ஆவின் நேரடி பால் விற்பனை நிலையங்களில் பழைய பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்வதால் பொதுமக்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர்.நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களின் பால் தேவையை நெல்லை ஆவின் பூர்த்தி செய்கிறது. நெல்லை ஆவினை பொறுத்தவரை சமன்படுத்திய பால் உள்பட 3 ரகங்கள் நீலம், பச்சை, ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் சமன்படுத்திய பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆவின் பால் விலையேற்றம் ஒருபுறம் இருக்க, தரமற்ற பால் சப்ளை செய்யப்படுவதாக சமீபகாலமாக அடிக்கடி புகார்கள் வரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் நெல்லையில் ஆவின் நேரடி விற்பனை நிலையங்களில் பழைய பால் விற்கப்படுவதாக வாடிக்கையாளர்கள் புகார் எழுப்ப தொடங்கியுள்ளனர்.
நெல்லை ஆவினுக்கு பழைய பஸ் நிலையம், புதிய பஸ்நிலையம், கோர்ட் எதிரில், மகாராஜ நகர் உழவர் சந்தை சமீபம் ஆகிய 4 இடங்களில் நேரடி விற்பனை நிலையங்கள் உள்ளன. இவற்றில் ஆவின் பால் மட்டுமின்றி பால் பொருட்களான பால்பேடா, பால்கோவா, நெய், மைசூர்பாகு, ஆவின் ஐஸ்கிரீம் ஆகியவையும் விற்பனை செய்யப்படுகின்றன. மக்கள் மத்தியில் ஆவின் பாலுக்கு என தனி முத்திரை உள்ளதால், பலர் அங்கு சென்று பால் பாக்கெட்டுகளை வாங்கி வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாக பால் பாக்கெட்டுகளை வாங்க செல்லும் சிலருக்கு முந்தைய தினம் தயாரிக்கப்பட்ட பால் வழங்கப்பட்டுள்ளது. அதை வீட்டிற்கு வாங்கிச் சென்று காய்ச்சிய போது கெட்டுப்போன நிலையில் இருந்ததால் திரிந்து விட்டது.
இதுகுறித்து அவர்கள் நேரடியாக சென்று விற்பனை நிலையங்களுக்கு சென்று புகார்கள் தெரிவித்தனர். ஆனால், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு ஊழியர்கள் பதில் அளிக்க முடியாமல் திணறுகின்றனர்.
சமீபத்தில் சென்னையில் நடந்த ஆவின் உயரதிகாரிகள் கூட்டத்தில் ஆவின் விற்பனையை அதிகரிக்க சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பேரில் ஆவின் நேரடி விற்பனை நிலையங்களுக்கு 100 பால் பாக்ெகட்டுகள் விற்கப்படும் இடங்களில் 200 பாக்கெட்டுகள் வரை விற்று தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அவற்றை விற்க முடியாமல், முந்தைய நாள் பாலை வாடிக்கையாளர்கள் தலையில் கட்டியது தெரிய வந்துள்ளது. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் ஆவின் உயர் அதிகாரிகளுக்கும் இதுகுறித்த தகவல் அனுப்பியுள்ளனர்.

No comments:
Post a Comment