Updated: January 5, 2016 19:10 IST
வீடு திரும்பும் சென்னை - சிந்தாதிரிப்பேட்டை பள்ளி மாணவர்கள்.
பள்ளிகளில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளம்பியதை தொடர்ந்து 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. புரளி கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல்
காஞ்சிபுரம் மாவட்டம் கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கேளம்பாக்கம் காவல் நிலையத்துக்கு இன்று காலையில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதைத் தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு, மாணவ, மாணவிகள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் பள்ளிக்கு சென்று அனைத்து இடங்களையும் சோதனை செய்தனர். ஆனால் சந்தேகப்படும் விதத்தில் எந்த பொருளும் சிக்கவில்லை. அதன் பின்னரே வெடிகுண்டு புரளி என்பது தெரியவந்தது. போனில் பேசிய நபரை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
வாட்ஸ்அப் புரளி
இந்நிலையில் வெடிகுண்டு புரளி 'வாட்ஸ் அப்' மூலம் காட்டுத் தீ போல பரவியது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அவை இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்கப்போகிறது என்கிற நிலையில் தகவல் பரவியதால் பெற்றோர்கள் பள்ளிகளுக்கு படையெடுத்து சென்றனர். பள்ளி நிர்வாகத்திடம் பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. உடனடியாக விடுமுறை விடுங்கள் என்று கேட்டுக்கொண்டனர். அதைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு குழந்தைகளை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
11 பள்ளிகள் விடுமுறை
கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் உள்ள வெட்டுவாங்கேணி செயின்ட் ஜோசப் பள்ளி, திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, பாலவாக்கம் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி, நீலாங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஈஞ்சம்பாக்கம் ஏஎல்எம் தனியார் பள்ளி, நீலாங்கரை பிரதர்ஸ் குட் பள்ளி, பாலவாக்கம் மேன்வெல் மோனி பள்ளி, கொட்டிவாக்கம் நெல்லை நாடார் மேல்நிலைப் பள்ளி மற்றும் சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் மேல்நிலைப்பள்ளி, மந்தைவெளியில் ஒரு தனியார் பள்ளி என 11 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
போக்குவரத்து நெருக்கடி
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பல பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று பரவிய செய்தியால் ஒரே நேரத்தில் பெற்றோர்கள் திரண்டு கார், மோட்டார் சைக்கிளில் மற்றும் பல வாகனங்களில் சென்றனர். இதனால் கிழக்கு கடற்கரை சாலையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டன. திருவான்மியூரில் இருந்து கானத்தூர் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
சென்னை நகரிலும் புரளி
வாட்ஸ்அப் தகவல் மேலும் பரவ, சென்னை நகரில் உள்ள பள்ளிகளுக்கும் பெற்றோர் படையெடுக்க ஆரம்பித்தனர். தங்கள் பிள்ளைகளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டனர். அடையாறு, மேற்கு மாம்பலம், அமைந்தகரை, அரும்பாக்கம், தி.நகர் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு பெற்றோர் சென்று குழந்தைகளை அழைத்து சென்றனர். ஆனால் இந்த பள்ளிகளில் விடுமுறை அளிக்கப்படவில்லை.
போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
சென்னை மாநகர காவல் ஆணையாளர் டி.கே.ராஜேந்திரன் கூறுகையில், "சென்னையில் எந்த பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் வரவில்லை. வாட்ஸ் அப் மூலம் தேவையில்லாத புரளியை சிலர் பரப்பி வருகின்றனர். வெடிகுண்டு புரளியை பரப்புபவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
No comments:
Post a Comment