Friday, 13 May 2016

பட்டுக்கோட்டையில் அரசு ஊழியர்கள் மறியல் ஆளுங்கட்சியினர் அதிர்ச்சி


பட்டுக்கோட்டை, : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற அரசு ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. அரசு அலுவலர்களுக்கு நடைபெறும் பயிற்சி வகுப்பிலேயே தபால் வாக்களிப்பதற்காக வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற வந்த அரசு ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு தபால் ஓட்டு போடுவதற்கான பேலட் பேப்பர் கொடுக்கவில்லை.
இதனால் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பயிற்சி வகுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்து பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேர்தல் நடத்தும் அலுவலர்களை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அரசு ஊழியர்கள் வாக்களிக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜசேகர் உறுதியளித்தார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது.
தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரன் வந்து விசாரித்தார். அப்போது சட்டமன்ற தேர்தலில் ஆளும்கட்சிக்கு எதிராக அரசு ஊழியர்கள் இருப்பது தெரிந்து தபால் வாக்குகளை தடுப்பதற்காக பேலட் பேப்பர் அனுப்பவில்லை. அனைவரும் வாக்களிக்க வேண்டுமென தேர்தல் கமிஷன் கூறுகிறது.
ஆனால் அரசு ஊழியர்களுக்கு பேலட் பேப்பர் தராதது வருத்தத்துக்குரியது. இதை பார்க்கும்போது ஆளும்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கமிஷன் செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்காவிட்டால் ஆளும்கட்சி வேட்பாளரை தவிர்த்து அனைத்து கட்சியை சேர்ந்த வேட்பாளர்களும் ஒன்றாக சேர்ந்து போராட வேண்டிய நிலை உருவாகும் என்றார்

No comments:

Post a Comment