கராச்சி,
பாகிஸ்தான் ரசிகர்களை விட இந்தியர்களை பாகிஸ்தான் வீரர்கள் அதிகம் நேசிக்கிறார்கள் என்ற அப்ரிடியின் கருத்து வேதனையும், அதிர்ச்சியும் அளிப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜாவீத் மியாண்டட் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றிற்கு ஜாவீத் மியாண்டட் அளித்த பேட்டியில் கூறுகையில், “ இது போன்ற கருத்துக்களை கூறியதற்காக வீரர்கள் அவர்களாகவே வெட்கப்பட வேண்டும். உங்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன்” என்று கூறினார்.
இதற்கிடையே, அப்ரிடிக்கு பாகிஸ்தானின் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தனது கருத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.அந்த நோட்டீஸில், அப்ரிடியின் கருத்து, பாகிஸ்தானின் நலனுக்கு எதிராக உள்ளது எனவும், தனது கருத்துக்காக நாட்டிடம் மன்னிப்பு கேட்டு தனது கருத்தை அப்ரிடி திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா பற்றி அப்ரிடி கூறியது என்ன?
கொல்கத்தாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த பாகிஸ்தான் கேப்டன் அப்ரிடி கூறியதாவது:-
இங்கு விளையாடுவதில் பாதுகாப்பு பிரச்சினை இருப்பதாக நாங்கள் ஒருபோதும் உணரவில்லை. இந்தியாவில் கிரிக்கெட் விளையாடும் போது கிடைக்கும் ஆனந்தத்தை போல் உலகில் வேறு எங்கும் நான் அனுபவித்தது கிடையாது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் கடைசி கட்டத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன். இந்தியாவில் கிடைக்கும் அன்பு சிறப்பானதாகும். அதனை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். இங்கு கிடைப்பது மாதிரியான அன்பை பாகிஸ்தானில் கூட உணர்ந்தது கிடையாது. பாகிஸ்தானை போல் இந்தியாவிலும் கிரிக்கெட் ஆர்வலர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள். ஒட்டுமொத்தத்தில் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இந்தியாவில் விளையாடுவதை நான் அதிகம் ரசித்து இருக்கிறேன்” இவ்வாறு அவர் கூறினார். அப்ரிடியின் இந்த கருத்துக்கு சொந்த நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால், அவருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment