தமிழகத்தில் எதிர்வரும் மே.16-ல் சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பேராவூரணி வாக்காளர்களிடையே பேராவூரணி சட்டமன்றத்தொகுதியில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக, திமுக சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற கேள்வி சாதரண பொதுமக்களிடமும் எழுந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் விதமாக பேராவூரணி செய்திகள் 24X7 ஊடகமானது அதிமுக, திமுக கட்சி நிர்வாகிகளிடமிருந்தும், சில பத்திரிக்கைகள் மூலம் கிடைத்த தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த இரண்டு கட்சிகளின் சார்பில் பேராவூரணியில் போட்டியிட வாய்ப்பு உள்ளோர் குறித்த அலசலை இங்கே பதிவாக பதிவிட்டுள்ளோம். இதன்படி,
திராவிட முன்னேற்றக்கழகம் ::
திமுகவானது பேராவூரணி தொகுதியைப்பொறுத்தவரையில் வலுவிழந்து இருப்பதாகவே கூறப்படுகிறது. கடந்த 2011 தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளரிடம் சில வாக்குகள் குறைவாக பெற்று திமுக கூட்டணி தோல்வி பெற்றிருந்ததற்கு இத்தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவது தான் என்று சில கட்சி நிர்வாகிகள் ஆவேசம் தெரிவித்தனர். அதனால் இந்த முறை பேராவூரணியில் திமுக சார்பில் தான் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று முதற்கட்ட தகவல்களும் வெளியாகியுள்ளன.
இந்த 2016 தேர்தலை பொறுத்தவரையில், பேராவூரணி ஒன்றியச்செயலாளர் செல்வராஜ், சேதுபாவாசத்திரம் ஒன்றியச்செயலாளர் மு.கி.முத்துமாணிக்கம், பேராவூரணி பேரூராட்சித்தலைவர் அசோக்குமார் போன்றோர் திமுக சார்பில் பேராவூரணியில் போட்டியிட விரும்பினாலும், துபாய் தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம் என்பவரும் பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு திமுகவில் விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். இது பேராவூரணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம்.
யாதவ குலத்தைச்சேர்ந்த இவர் செல்வசெழிப்போடு இருப்பதாலும், திமுக தலைமையிடம் நெருக்கம் காட்டுவதாலும் இவருக்கு தான் திமுக சார்பில் சீட் கிடைக்கும் என அண்ணா அறிவாலய முக்கிய புள்ளிகள் ஆருடம் கூறியுள்ளனராம்.
1967 தமிழக சட்டப்பேரவைத்தேர்தலுக்கு பின்னர் பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் திமுக வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்::
பேராவூரணியை பொறுத்தவரையில் இத்தொகுதி அதிமுகவின் கோட்டையாகவே பார்க்கப்படுகிறது. பேராவூரணியின் தேர்தல் பிரச்சாரத்தில் பேராவூரணியில் ₹8 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள கல்லூரி, ஆதிதிராவிடர் நல விடுதி, புதிய பள்ளி கட்டிடங்கள், புதிய சாலைகள், புதிய பேருந்துகள் உள்ளிட்டவை மிக முக்கிய பங்கு வகிக்கும் என தகவல்கள் வெளியாகிவருகின்றன. பேராவூரணியில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவுவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தமுறை அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அவர்கள் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட உள்ளதாக பல்வேறு ஊடகங்களும், பத்திரிக்கைகளும் செய்தி வெளியிட்டுவருகின்றனர். இது உண்மையானால் அத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரான தமிழக வீட்டுவசதி மற்றும் வேளாண்துறை அமைச்சரும், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான வைத்திலிங்கம் பேராவூரணியில் போட்டியிட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பேராவூரணி தொகுதியை பொறுத்தவரையில் சு.பாஸ்கரன், குழ.செல்லையாவின் மகன் அருள்நம்பி, சேதுபாவாச்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் வீரகபிலன், சாந்தி அசோக்குமார் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.
அதிமுகவை பொறுத்தவரையில் பேராவூரணியில் திமுக டெபசிட் இழக்க வைக்கும் விதத்தில் சரியான முடிவை கட்சி மேலிடம் எடுக்கும் எனவும் சில கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பேராவூரணி சட்டப்பேரவைத்தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக திரு.பேராவூரணி திலீபன் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் சில தனித்துப்போட்டியிடும் கட்சிகளான தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் கசியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment