Thursday, 10 March 2016

பருவநிலை மாற்றம் அமீரகம் முழுவதும் பலத்த மழை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

11:27 AM | மார்ச் 10, 2016

அபுதாபி, 
அமீரகத்தில் சில பகுதிகளிலும், ஓமன் நாட்டிலும் நேற்று முன்தினம் திடீரென பலத்த மழை பெய்தது.
அடுத்த 3 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்து அமீரகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கியது.
அபுதாபி, துபாய், சார்ஜா, அஜ்மான், உம் அல் குவைன், ராசல் கைமா, புஜேரா உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாமல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக காலையில் அலுவலகம் மற்றும் பள்ளிக்கூடங்கள் செல்வோர் மிகவும் சிரமப்பட்டனர். பகல் நேரம் இரவு போல் இருண்டு காட்சியளித்தது.
அபுதாபியில் பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. மழையுடன் சேர்ந்து 130 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசியது. கலிபா சாலையில் கடை ஒன்றின் பெயர் பலகை உடைந்து விழுந்தது. இதன் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது. அபுதாபி கடற்கரை சாலையில் கார்கள் மழை வெள்ளத்தில் சிக்கி மெதுவாக ஊர்ந்து சென்றன.
அபுதாபியில் உள்ள ஓட்டல் ஒன்றின் கண்ணாடிகள் பலத்த காற்று காரணமாக சேதமடைந்தன. அபுதாபி ஏர்போர்ட் சாலையில் பல மரங்கள் சாய்ந்து விழுந்தன. அந்த பகுதியில் கீழே விழுந்து இருந்த மரங்களை மாநகராட்சி ஊழியர்கள் வேகமாக அப்புறப்படுத்தும் பணியினை மேற்கொண்டனர். கார்கள் நிறுத்தும் இடத்தின் மேற்கூரை சில இடங்களில் வேகமான காற்றின் காரணமாக சரிந்து விழுந்தது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் சேதமடைந்தன.
அபுதாபி விமான கண்காட்சியும் தொடர்ந்து 2–வது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டது. இதனைக் காண வந்த பார்வையாளர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர். அபுதாபியில் மழை காரணமாக நேற்று மதியத்துக்கு பின்னர் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் ஒரு சில மணி நேரத்துக்கு பின்னர் விமான சேவை மீண்டும் தொடங்கியது.
அபுதாபியில் உள்ள மக்கள் மிகவும் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மற்றபடி வீடுகளை விட்டு யாரும் வெளியில் வரவேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டனர். அபுதாபியில் நேற்று ஒரு நாளில் மட்டும் 110 மி.மீ. மழை பெய்துள்ளது.
துபாயில் பெய்த மழையினால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அங்கு உள்ள தாழ்வான இடங்களில், குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த ஏராளமான கார்கள் மழைவெள்ளத்தில் மூழ்கின. ஜுமைரா லேக் டவர் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதிகாப்பு கருதி இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.
துபாய் ஷேக் ஜாயித் சாலையில் தானுபே மெட்ரோ ரெயில் நிலையம் அருகே தண்ணீர் தேங்கி நின்றது. நேரம் செல்லச்செல்ல தண்ணீர் வெளியே செல்ல முடியாமல் குளம் போல் காட்சி அளித்தது. இதனால் அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஜெபல் அலி தொழிற்பேட்டை பகுதியில் மழையின் காரணமாக சில இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அந்த பகுதிக்குள் கார்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. அந்த பகுதியில் உள்ள வீட்டின் முன்புறம் தண்ணீர் தொடர்ந்து தேங்கி வருவதாக குடியிருப்பு வாசி ஒருவர் கவலை தெரிவித்தார்.
கனமழையால் அலுவலகம் ஒன்றின் மேற்கூரை சேதமடைந்து கற்கள் அலுவலகத்தில் விழுவதாக அங்கு வேலை பார்க்கும் ஊழியர் ஒருவர் கூறினார். துபாய் ஸ்போர்ட்ஸ் சிட்டி, ஜுமைரா பார்க் பகுதி, ஜுமைரா லேக் டவர்ஸ் பகுதி, டிஸ்கவரி கார்டன் உள்ளிட்ட பகுதிகளிலும் மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி நின்று இருந்ததை காண முடிந்தது.
துபாயில் புர்ஜ் கலீபா கோபுரம் அருகே மழையுடன் மின்னலும் அதிகமாக இருந்தது. இந்த மின்னல் காரணமாக வானத்தில் சிறு கீறல் விழுந்தது போல் காணப்பட்டதாக அந்த பகுதி குடியிருப்புவாசி ஒருவர் தெரிவித்தார்.
துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள பள்ளிக்கூடங்கள் நேற்று விடுமுறை அறிவித்து இருந்தன. இதனால் பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோரிடம் தங்களது குழந்தைகளை அழைத்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.
மழை காரணமாக விமான சேவைகள் தாமதம் ஆனது. எனினும் விமான நிலையத்துக்கு வருபவர்கள் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களது விமானம் செல்லும் நேரத்தை உறுதி செய்து விட்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். குளோபல் வில்லேஜ் கண்காட்சி நேற்று மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
துபாயில் நேற்று பெய்த மழையால் 235 சிறு விபத்துகள் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும், ஒரு சிலருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.
சார்ஜாவின் அனைத்து பகுதிகளிலும் கார்களை நிறுத்தும் இடத்தில் இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம். காலநிலை காரணமாக சார்ஜா மாநகராட்சி இந்த அறிவிப்பினை வெளியிட்டது. சார்ஜா வாதி அல் ஹீலோ பகுதிக்கு செல்லும் சாலை இருபுறமும் மூடப்பட்டதாக சார்ஜா போலீசார் தெரிவித்தனர். சார்ஜாவில் உள்ள சாலைகளில் மழை இருள் காரணமாக கார்கள் செல்வது கூட தெரியாத அளவுக்கு காணப்பட்டதாக சாலையை கடந்து சென்ற பொதுமக்கள் தெரிவித்தனர்.
அஜ்மான், உம் அல் குவைன், புஜேரா, அல் அய்ன் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. ராசல் கைமா மலை பகுதிகளில் மழை வெள்ளம் கடல் போல் காட்சி அளித்தது. இதில் வாகனங்கள் மேற்கொண்டு செல்ல முடியாமல் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
ராசல் கைமா சாலையில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடியது. ஒரு சில இடங்களில் பனிக்கட்டி மழை பெய்ததாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர். புஜேராவிலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஒரு சில இடங்களில் ரோடு முழுமையாக துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத அளவு காணப்பட்டது. ராசல் கைமா– புஜேரா இடையே தரைப்பாலத்தில் மழை வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அந்த பகுதியை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்தனர்.
மழை காரணமாக அமீரகத்தின் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் இன்று (வியாழக்கிழமை) விடுமுறை விடப்படுவதாக அமீரக கல்வி மந்திரி ஹுசைன் அல் ஹம்மாதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மஸ்கட், சோகர் உள்ளிட்ட ஓமன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று கன மழை பெய்தது. ஓமனில் ஒரு சில இடங்களில் பெய்த பலத்த மழையில் கார்கள் சிறிது அளவு மட்டும் வெளியே தெரியும் படி தண்ணீரில் மூழ்கி இருந்ததை காண முடிந்தது.

No comments:

Post a Comment