இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
விவசாய நிலங்களின் வழியாக குழாய் பதித்து எரிவாயு கொண்டுச் செல்ல கெயில் நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைகள் வழியாக இந்த திட்டத்தை செயல்படுத்தும் சாத்தியங்கள் உள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு உரிய ஆவணங்களுடன் நீதிமன்றத்தில் வாதாட தவறிவிட்டது என்றே நான் கருதுகிறேன். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக உடனடியாக மறு சீராய்வு மனுவினை தாக்கல் செய்ய வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
கேரளாவிலிருந்து, கர்நாடகாவுக்கு எரிவாயுவை கொண்டு செல்வதற்காக தமிழ்நாட்டின் சேலம், திருப்பூர், நாமக்கல் உள்ளிட்ட 7 மாவட்ட விளை நிலங்கள் வழியாக குழாய்களை பதிக்க கெயில் நிறுவனம் முயற்சித்த போது, தமிழகம் கொந்தளித்து. விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள், கட்சிகளின் போராட்டங்களை தொடர்ந்து தமிழக அரசு அந்த திட்டத்திற்கு தடை விதித்தது. இதைத் தொடர்ந்து கெயில் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகி தடைக்கு எதிராக அனுமதி பெற்றது. பின்னர் இந்த அனுமதியை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றம் வழங்கிய அனுமதியை உறுதி செய்து விளை நிலங்கள் வழியாக குழாய்கள் பதித்து எரிவாயு எடுத்துச் செல்ல கெயில் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த தீர்ப்பு விவசாயிகளின் நலனுக்கு எதிரானது. இதன் காரணமாக லட்சக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். விவசாயமும் பெரிய அளவில் பாதிக்கப்படும். ஆகவே, இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மறு சீராய்வு மனுவினை தாக்கல் செய்திட வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment