Monday, 11 January 2016

பெர்த்தில் நாளை முதல் ஒன்டே: ஆஸி. சவாலை எதிர்கொள்ளுமா இந்தியா?




பெர்த்: இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 5 ஒருநாள் மற்றும் 3 டி.20 போட்டி  நடைபெற உள்ளன. இதன் முதல் ஒரு நாள் டி.20 போட்டி பெர்த் மைதானத்தில் நாளை நடக்கிறது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டம்  இந்திய நேரப்படி காலை 8.50 மணிக்கு துவங்குகிறது. டோனி தலைமையிலான இந்திய அணியில் புதுமுக வீரர்களாக மணிஷ்பாண்டே, வேகப்பந்து  வீச்சாளர் சரண் ஆகியோர் களம் இறங்குகின்றனர். 2 பயிற்சி போட்டிகளிலும் சரண் அற்புதமாக பந்து வீசி கவனத்தை ஈர்த்துள்ளார். 6 பேஸ்ட்மேன், 3  வேகம், ஒரு சுழற்பந்து வீச்சாளர், ஒரு ஆல்ரவுண்டர் என இந்தியா களம் இறங்குகிறது. வேகத்தில் இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சரண்  ஆகியோருக்கும் இடம் கிடைக்கும்.

சுழற்பந்து வீச்சில் அஸ்வினுடன், ஆல்ரவுண்டர் ஜடேஜாவா அல்லது அக்‌ஷர்பட்டேலா என்பதில் இழுபறி உள்ளது. பயிற்சி போட்டியில் ஜடேஜாவை  விட பட்டேல் சிறப்பாக பந்து வீசி உள்ளார். இருப்பினும் ஜடேஜாவுக்குதான் வாய்ப்பு கிடைக்கலாம். விராட்கோஹ்லி, ரோகித், தவான், ரகானே  ஆகியோர் நல்ல பார்ம்மில் உள்ளதால் இந்தியா கடும் சவால் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரெய்னா நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த  இடத்தில் மணிஷ்பாண்டே களம் இறங்குவதால் அவர் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மறுபுறம் சொந்த மண்ணில் ஆஸி. சிம்ம சொப்பனமாக  திகழ்கிறது. உலக கோப்பை போட்டிக்கு பின்னர் சொந்த மண்ணில் ஆஸி. ஒருநாள் போட்டியில் களம் இறங்குகிறது.

வார்னர், ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், பாக்னர் என அதிரடி ஆட்டக்காரர்கள் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள். ஸ்டார்க்,  ஜான்சன் இல்லாத நிலையில், இளம்வேகப்பந்து வீச்சாளர் பாரிஸ், போலன்ட் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். வேகத்துக்கு சாதகமான பெர்த்  மைதானத்தில் பவுன்சர்களால் இந்திய வீரர்களை மிரட்ட காத்திருக்கின்றனர். கடைசியாக இரு அணிகள் மோதிய உலக கோப்பை அரை இறுதியில்  இந்திய அணியை, ஆஸி. 95 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது. சொந்த மண்ணில் ஆஸி.யை வீழ்த்துவது இந்திய அணிக்கு கடும் சவால்தான்.  ஐசிசி தரவரிசையில் முதல் இரு இடத்தில் உள்ள அணிகள் மோதுவதால் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. வெற்றியுடன் தொடரை தொடங்கப்போவது  யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தரிவரிசை எப்படி?

தற்போது 114 புள்ளிகளுடன் தரிவரிசையில் 2வது இடத்தில் உள்ள இந்தியா, ஆஸி.யுடன் அனைத்து போட்டிகளிலும் தோற்றால் 111 புள்ளிகளுடன்  3வது இடத்திற்கு சரியும். ஒருபோட்டியில் வென்றாலும் 2வது இடத்தில் நீடிக்கலாம். ஆஸி. அனைத்து போட்டியில் தோற்றாலும் 120 புள்ளிகளுடன்  முதல் இடத்தில் நீடிக்கும்.

மெக்ராத்தின் ஜெர்சியில் ஜோயல்

வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் மைதானத்தில், புதுமுக வீரர் ஜோயல் பாரிஸ் களமிறக்கப்படலாம் என தெரிகிறது. இதில், அவர்  ஆஸ்திரேலியாவின் முன்னாள் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான கிளென் மெக்ராத்தின் 11ம் எண்ணிட்ட ஜெர்சியை அணிவார் என தெரிகிறது. 23  வயதில் ஜோயல் பாரிஸ் சர்வதேச போட்டிகளில் களமிறங்க உள்ளார். மெக்ராத்தும் தனது 23வது வயதில்தான் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி  பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது சிறப்பான கேரியரில் மெக்ராத், 381 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜோயல் பாரிஸ் 13 முதல் தர  போட்டிகளில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.


இந்திய அணி: டோனி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் ஷர்மா, விராத் கோஹ்லி, ரகானே, மணிஷ் பாண்டே, அஷ்வின், ஜடேஜா, புவனேஸ்வர்குமார்,  அக்சர் பட்டேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், குர்கீரத் சிங் மான், ரிஷி தவான், பிரெய்ண்டர் சரண்.

ஆஸி. அணி : ஸ்டீவன் ஸ்மித்(கேப்டன்), ஜார்ஜ் பெய்லி, ஸ்காட் போலன்ட்,ஜேம்ஸ் பாக்னர், ஆரோன் பிஞ்ச். ஹேசல்வுட், மிட்செல் மார்ஷ், ஷான்  மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், ஜோயல் பாரிஸ், ரிச்சர்ட்சன், மத்தேயூ வேட் (விக்கெட் கீப்பர்),  டேவிட் வார்னர்.

No comments:

Post a Comment