Monday, 21 December 2015

நிர்பயா வழக்கின் இளம் குற்றவாளி விடுதலைக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

தி இந்து 

இளம் குற்றவாளி விடுதலைக்கு எதிரான மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால்.| படம்: வி.சுதர்சன்.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பலாத்கார வழக்கின் இளம் குற்றவாளி விடுதலைக்கு எதிராக டெல்லி மகளிர் ஆணையம் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.கே.கோயல் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.
மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்த நீதிபதி ஏ.கே.கோயல், "உங்கள் கவலையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். ஆனால், சட்டத்துக்கு உட்பட்டே செயல்பட முடியும். சட்டப்படி விடுவிக்கப்பட்ட சிறுவனின் சுதந்திரத்தை தடுக்க முடியாது.
சட்டத்தை மீறி செயல்படுதற்கில்லை. இங்கு அனைத்து விஷயங்களும் சட்டத்துக்கு உட்பட்டே நடைபெறுகின்றன. எனவே அதை பின்பற்றியே நாங்கள் செயல்படுகிறோம். அரசியல் சாசன சட்டப் பிரிவு 21-ன் கீழ் வழங்கப்பட்டிருக்கும் அடிப்படை உரிமையை பறிக்க இயலாது" எனக் கூறினார்.
நிர்பயா பலாத்கார வழக்கில் இளம் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு தண்டனை முடிந்ததை அடுத்து, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் விடுதலை செய்யப்பட்டார். பாதுகாப்பு கருதி அவரை ஒரு தொண்டு நிறுவனத்தில் (என்ஜிஓ) ஒப்படைத்துள்ளனர்.
இந்நிலையில், டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால், இளம் குற்றவாளியின் விடுதலைக்கு தடை விதிக்கக் கோரி நேற்று முன்தினம் நள்ளிரவு (சனிக்கிழமை) உச்ச நீதிமன்றத்தில் ஒரு சிறப்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி ஏ.கே.கோயல் மற்றும் யுயு லலித் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, அவசர வழக்காக விசாரிக்க மறுத்ததுடன் இளம் குற்றவாளியின் விடுதலைக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 2 மணிக்கு தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த மனு திங்கள்கிழமை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். ஆனால், இளம் குற்றவாளி விடுதலைக்கு எதிரான டெல்லி மகளிர் ஆணைய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முன்னதாக, இளம் குற்றவாளியை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனு நிராகரிக்கப்பட்டது என்பது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment