Friday, 11 March 2016

150 அடி கிணற்றில் விழுந்த சிறுவன் 3 நாளுக்கு பின் உயிருடன் மீட்பு


தேனி அருகே உள்ள பண்ணைப்புரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன்(வயது41) இவர் மனைவியுடன் கேரளாவில் எஸ்டேட் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர். அவரது மகன் பிரதீப்(வயது13), சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டியில் உள்ள பள்ளி விடுதியில் தங்கி 8–ம் வகுப்பு படித்து வருகிறான்.
இவரது பாட்டி சரோஜினி பண்ணைப்புரத்தில் உள்ளார். கடந்த 8–ந்தேதி பாட்டி வீட்டிற்கு வந்தான். அங்கு சாப்பிட்டுவிட்டு விளையாட செல்வதாக கூறி சென்றவன் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் குடும்பத்தினர் பல இடங்களில் தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை
இதுகுறித்து கோம்பை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த நிலையில் பண்ணைப்புரத்தின் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள சுமார் 150 அடி ஆழ கிணற்றில் நேற்று காலை முனகல் சத்தம் கேட்டுள்ளது. அந்த வழியே நடந்துசென்றவர்கள் சத்தம் வந்த கிணற்றின் அருகில் சென்று எட்டிப்பார்த்தனர்.
அப்போது முள்புதர்களும் செடிகளும் மண்டி திகிலூட்டும் கிணற்றில் சிறுவனின் அழுகுரல் கேட்டதால் உடனடியாக உத்தமபாளையம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் புருசோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கயிற்றை கட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்த பிரதீப்பை உயிரோடு மீட்டனர்.
 இதுகுறித்து சிறுவன் கூறுகையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பாட்டி வீட்டிற்கு வந்த நான் அந்த கிணற்றின் பக்கத்தில் விளையாடினேன். புறா அதிகம் அந்த கிணறு அருகே பறந்துபோனதால் அதனை பிடிக்கலாம் என்றபோது தவறிவிழுந்தேன். நானும் 3 நாட்களாகவே சத்தம்போட்டேன். யாருக்கும் கேட்கவில்லை. இப்போது என்னை மீட்டுள்ளனர் என்றார்

No comments:

Post a Comment