Thursday, 7 January 2016

சையத் முஸ்தாக் அலி டி20 லீக்: அபினவ் முகுந்த் அதிரடியால் தமி்ழ்நாடு எளிதில் வெற்றி


பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, ஜனவரி 07, 9:53 PM IST  

சையத் முஸ்தாக் அலி டி20 லீக் தொடரில் இன்றைய லீக் போட்டிகளில் ஒன்றில் தமிழ்நாடு- குஜராத் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக பார்தீவ் பட்டேல், பன்சால் ஆகியோர் களம் இறங்கினார்கள். பன்சால் ரன்ஏதும் எடுக்காமல் ரிட்டையர்டு ஹர்ட் மூலம் வெளியேறினார். பட்டேல் 4 ரன்னில் அவுட் ஆனார். அதன்பின் வந்த ஜூனெஜா 13 ரன்னிலும், பாத் 8 ரன்னிலும், காந்தி 14 ரன்னிலும் அவுட் ஆனார்கள்.

6-வது வீரராக களம் இறங்கிய டெய்லர் 44 ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அவருக்குப்பின் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணில் வெளியேற குஜராத் அணி 105 ரன்னில் சுருண்டது. தமிழ்நாடு அணி சார்பில் சதீஷ், ரஹில் ஷா தலா 2 விக்கெட்டுக்களும், அந்தோணி தாஸ் 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தமிழ்நாடு களம் இறங்கியது. தொடக்க வீரர் தினேஷ் கார்த்திக் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால், மற்றொரு தொடக்க வீரர் அபினவ் முகுந்தும், அடுத்து வந்த அபரஜித்தும் அதிரடியாக விளையாடினார்கள். இதனால் தமிழ்நாடு அணி 12.5 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் குவித்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அபினவ் முகுந்த் 36 பந்தில் 7 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 67 ரன்களுடனும், அபரஜித் 31 பந்தில் 30 ரன்களுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்

No comments:

Post a Comment