சென்னை: தமிழகம் முழுவதும் 578 சார்பதிவாளர் (சப்-ரிஜிஸ்திரார் )அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளைநிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றம், திருமண பதிவு ஆகியவை செய்யப்பட்டு வருகிறது. இத்துடன், இந்த ஆவண பிரதிகளையும், இதன் விவரங்களையும் தொகுப்பது, இத்துறையின் பணியாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஆண்டுக்கு, 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவு செய்யப்படுகின்றன. அரசுக்கு வருவாய் ஈட்டி தருவதில் பதிவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. இத்தகைய முக்கியமான அரசு துறைகளில் பத்திரப்பதிவு மற்றும் அது தொடர்பான பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னேற்பாடாக பத்திரப்பதிவின் போது விற்பவர், வாங்குபவர் விரல் ரேகை பதிவு செய்வது, புகைப்படம் எடுப்பது போன்ற பணிகளை, ‘‘அவுட் சோர்சிங்’’ முறையில் தனியார் நிறுவன பணியாளரை கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக, பத்திரப்பதிவு தொடர்பான நிர்வாக பணிகளையும் ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் ஒப்படைக்க அரசு தீர்மானித்துள்ளது. தனியார் நிறுவனத்திடம் அனைத்து ஆவணங்கள் செல்வதால் பதிவு பணிகளில் பாதுகாப்பற்ற சூழல் உருவாக வாய்ப்புள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து, பதிவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: சார்பதிவு அலுவலகங்களில் குறிப்பிட்ட சில பணிகளை, ‘‘அவுட் சோர்சிங்’’ முறையில், ஆவணங்களை ஸ்கேன் செய்வது, ‘‘இன்டக்சிங்’’ எனப்படும் அட்டவணை பதிவேட்டில் சேர்ப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள தகவல் தொழில்நுட்பத்துறையில் பிரபலமான ஒரு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவு பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் பதிவு பணிகளில் பாதுகாப்பற்ற சூழல் உருவாக வாய்ப்புள்ளது. மேலும், பதிவுப்பணிக்கான வருமானம் அரசிடம் முறையாக சேருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பதிவு அலுவலர்கள் தங்களது அதிகாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். எனவே, பதிவு பணிகள் முழுவதையும் தனியாரிடம் ஒப்படைப்பதை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment