
பேராவூரணி, டிச.24–பேராவூரணி அருகே உள்ள வீரியங்கோட்டையை சேர்ந்தவர் வேலுச்சாமி. ஊர் பஞ்சாயத்து தலைவராகவும், தஞ்சை மாவட்ட தி.மு.க. விவசாய அணி துணை அமைப்பாளராகவும் உள்ளார். இவரது வீட்டின் ஒரு பகுதியில் பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் புல்தரை உள்ளது.இந்த பகுதியில் பந்து ஐஸ்கிரீம் எனப்படும் பிளாஸ்டிக் டப்பா ஒன்று கிடப்பதை பார்த்து வேலுச்சாமி மகன் அஸ்வந்த் தனது தந்தையிடம் காண்பித்தார். அது வெடிகுண்டு போன்றும், அடிப்பகுதியில் காற்று போகும் அளவில் திரி ஒன்று இருப்பதும் தெரிய வந்தது. இதனால் பதட்டம் அடைந்த வேலுச்சாமி இதுபற்றி பேராவூரணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.தகவல் அறிந்து பட்டுக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த்மேனன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தஞ்சையிலிருந்து வெடிகுண்டு நிபுணர்கள் வந்து அதனை சோதனையிட்டனர். மோப்பநாய் சச்சினும் வரவழைக்கப்பட்டு அங்கு ஆய்வு செய்யப்பட்டது. அத்துடன் வெடிகுண்டு போன்ற அந்த பொருளை கைப்பற்றினர்.அதில் கந்தகத்தில் தயாரிக்கப்பட்ட கருப்புநிற மருந்து அடைக்கப்பட்டு இருந்ததாகவும், வெயிலில் காய்ந்ததும் வெடிக்கக்கூடிய நிலையில் தயாரிக்கப்பட்டு இருக்கலாம் எனவும், அதற்கு ஏற்றார்போல் அதன் மேல் பகுதியில் பாஸ்பரஸ் எனப்படும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.வேலுச்சாமி வீட்டை தகர்க்க இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டதா? இதனை வைத்து விட்டு தப்பிச் சென்றவர்கள் யார்? என்ன காரணம்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.ஊராட்சிமன்ற தலைவர் வீட்டில் வெடிகுண்டு கிடந்த செய்தி அறிந்து ஏராளமானோர் அவரது வீட்டின் முன்பாக குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment