Saturday, 10 September 2016

ஒட்டகம் அறுக்க தடை!- தொல்.திருமாவளவன் கண்டனம்.

ஒட்டகம் அறுக்க தடை!
- தொல்.திருமாவளவன் கண்டனம்.

பக்ரீத் பெருநாளை முன்னிட்டு இசுலாமியர்கள் தமது மார்க்கக் கடமையை நிறைவேற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிட்டு ஏழை எளியோருக்கு பங்கிட்டு வருகின்றனர். இந்நிலையில் அண்மைக்காலமாக இந்துத்துவ அமைப்புகள் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மாடு அறுப்பதற்கு இடையூறு செய்து இசுலாமியர்களின் வழிபாட்டு உரிமைக்கு ஊறு விளைவித்து வருகின்றனர். ஆங்காங்கே மாடுகளை தடுப்பதும், மாடு வாங்கி வருபவர்களை தாக்குவதும் நடந்து வருகிறது. இத்தகைய வன்முறைகளால் வேதனையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய மக்களுக்கு, ஒட்டகம் வெட்ட தடை என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டகம் அரிய வகை விலங்கோ, அறுத்து உண்பதற்கு தடை விதிக்கப்பட்ட விலங்கோ அல்ல. சட்டப்படி அனுமதிக்கப்பட்ட ஒரு விலங்கை அறுக்க விடாமல் தடுப்பது சட்டப்புறம்பானதாகும். ஒட்டகம் அறுப்பதற்கு உரிய இடம் இல்லை என காரணம் சொல்லும் நீதிமன்றம், அந்த இடத்தை ஏற்பாடு செய்து கொடுக்கும்படி அரசுக்கு வழிகாட்ட வேண்டுமே தவிர, அறுக்கவே கூடாது என தடை விதிக்கக் கூடாது. ஆனால், எவ்வித அடிப்படை காரணமும் இன்றி உள்நோக்கத்துடன் தடை விதித்திருப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள வழிபாட்டு உரிமையில் தலையிடுவதாகும். இது, அரசியலைப்புச் சட்டத்தையே அவமதிப்பதாகும்.
இத்தகைய பாரபட்ச தீர்ப்புகள் இந்த நீதி அமைப்பின் மீது இசுலாமியர்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும். எனவே, தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய ஆவனம் செய்து, எவ்வித இடையூறும் தடையும் இன்றி ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிட்டு இசுலாமியர்கள் பக்ரீத் கொண்டாட வழிவகுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
தொல்.திருமாவளவன்
தலைவர், விசிக.
நன்றி தோழர் திருமாவளவன் அவர்களுக்கு...

No comments:

Post a Comment