Tuesday, 5 April 2016

ம.ந.கூட்டணியில் இருந்து விஜயகாந்த் விலக வேண்டும்: சந்திரகுமார் தலைமையில் தேமுதிகவினர் போர்க்கொடி

Updated: April 5, 2016 15:42 IST

திமுக கூட்டணியில் இணைவதால் மட்டுமே தேமுதிகவை காப்பாற்ற முடியும் என்றும், மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்தது தற்கொலை முடிவு என்றும் சந்திரகுமார் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சந்திரகுமார், "தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியால் ஜெயலலிதாவை இத்தேர்தலில் வீழ்த்த முடியாது. கூட்டணியை தீர்மானிப்பதில் விஜயகாந்த் தவறான முடிவை எடுத்துவிட்டார். அவர் தற்போது எடுத்துள்ள முடிவு ஜெயலலிதாவுக்கு சாதகமானது. வெற்றி கூட்டணியை விஜயகாந்த் அமைப்பார் என நாங்கள் நம்பினோம். ஆனால், எங்கள் நம்பிக்கை வீணாகிவிட்டது.
திமுக கூட்டணியில் இணைவதால் மட்டுமே தேமுதிகவை காப்பாற்ற முடியும் என்றும் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்தது தற்கொலை முடிவு.
தேமுதிக மாநாடு, பொதுக்குழு கூட்டம் என எங்கும் கூட்டணி குறித்து அறிவிக்காமல் திடீரென ஒருநாள் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிக இணைந்துவிட்டதாகக் கூறினார். வாக்குறுதிக்கு மாறாக விஜயகாந்த் நடந்துகொண்டார்.
கட்சிக்காக நாங்கள் அரும்பாடுபட்டோம். தேமுதிகவை வளர்த்ததில் எங்களுக்கு முக்கிய பங்குண்டு. எங்கள் விசுவாசத்துக்கும், உழைப்புக்கும் நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.
விஜயகாந்த் முடிவால் நாங்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளோம். ஆனால், அதற்காக நாங்கள் கட்சியைவிட்டு விலகவில்லை.
மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விஜயகாந்துக்கு கடிதம் கொடுத்தோம். அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
எனவே, இந்த செய்தியாளர்கள் சந்திப்பின் வாயிலாக கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறோம்.
திமுகவுடன் இணைவதே எங்கள் விருப்பம், எங்கள் தனிப்பட்ட விருப்பம் மட்டுமல்ல ஒட்டுமொத்த தொண்டர்களின் விருப்பம்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் விரும்பினார். ஆனால், மக்கள் விருப்பத்துக்கு மாறாக விஜயகாந்த் முடிவு எடுத்துள்ளார். மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்ததற்கான காரணம் என்னவென்பதை விஜயகாந்த் விளக்க வேண்டும். மோசமான முடிவால் தேமுதிக அழிவை நோக்கிச் செல்கிறது" என்றார்.
விசுவாசத்துக்கு மதிப்பில்லை:
அவர் மேலும் கூறும்போது, "கடந்த 5 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் அதிகம் பாதிக்கப்பட்ட ஒரே கட்சி தேமுதிகதான். எவ்வளவோ பிரச்சினைகளுக்கும் இடையே தேமுதிகவில் விசுவாசத்தோடு இருந்தோம். என் மீதும் இன்னும் பிற தொண்டர்களும் வழக்குகளால் பாதிக்கப்பட்டோம்.
ஜெயலலிதாவை ஆட்சியை விட்டு இறக்குவேன், இதற்காக எந்த தியாகமும் செய்வேன் என்றார் விஜயகாந்த். ஆனால், வாக்குறுதிகளுக்கு மாறாக செயல்படுகிறார் விஜயகாந்த். தி.மு.க.வில் கூட்டணி வைக்க வலியுறுத்தினோம். எங்கள் விசுவாசத்திற்கு மதிப்பில்லாமல் போய்விட்டது. மக்கள் நலக்கூட்டணியுடன் சேர்ந்தது தனிச்சையான முடிவு" என்றார்.
நாளை வரை அவகாசம்:
"ஒரு கட்சியில் தலைவர் எடுக்கும் முடிவை தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் எதார்த்த நிலை. எனினும், தொண்டர்கள் விரும்பும் முடிவையும் தலைவர் எடுக்க வேண்டும்.
நாங்கள் விரும்பியது திமுகவுடனான கூட்டனி ஆனால் அந்த முடிவை எங்கள் தலைவர் எடுக்கவில்லை. கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என வலியுறுத்தி கடந்த 24 ஆம் தேதி தலைவர் விஜயகாந்துக்கு ஒரு கடிதம் எழுதினோம். எனினும், இதுவரை அதற்கு பதில் இல்லை.
இந்தச் சூழ்நிலையில், நாங்கள் யாரும் தேமுதிகவிலிருந்து விலகவில்லை. நாளை பிற்பகலுக்குள் விஜயகாந்த் கூட்டணி முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து நாளை முடிவு செய்யப்படும்" என்றார் சந்திரகுமார்

No comments:

Post a Comment