பேஸ்புக் பயன்படுத்தும் எந்த ஒருவராலும் இன்னுமொருபேஸ்புக் நண்பருக்கு அழைப்புக்களை மேற்கொள்வதற்கான வசதியை அண்மையில் பேஸ்புக் நிறுவனம் உலகளாவிய ரீதியில் அறிமுகப்படுத்தியிருந்தது.
இதன் மூலம் பேஸ்புக் மெசெஞ்சர் பயன்படுத்தும் நபர்களுக்கு மத்தியில் தடையின்றி குரல்/வீடியோ அழைப்புக்களை மேற்கொள்ள முடிந்தது.
தற்பொழுது ஒன்றுக்கு மேற்பட்ட நண்பர்கள் இணைந்து குழு உரையாடலில் ஈடுபடுவதற்கான "குரூப் காலிங்" (Group Calling) வசதியும் பேஸ்புக் மெசெஞ்சர் சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வசதியை நீங்களும் பெற்றுக்கொள்ள கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பு மூலம் பேஸ்புக் செயலியை புதிய பதிப்பிற்கு மேம்படுத்திக் கொள்க.
இனி பேஸ்புக் மெசெஞ்சர் செயலியின் மேல் மத்திய பகுதியில் வழங்கப்பட்டுள்ள குறியீட்டை சுட்டுவதன் ஊடாக அதன் "குரூப்" பகுதிக்கு செல்க.
பின் அதன் வலது கீழ் மூலையில் வழங்கப்பட்டுள்ள "+" குறியீட்டை சுட்டுவதன் மூலம் புதிய குழு ஒன்றை உருவாக்குக. பின்னர் அதில் நீங்கள் ஒரே நேரத்தில் பேச விரும்பும் அனைத்து நண்பர்களையும் இணைத்துக்கொள்க.
இனி நீங்கள் உருவாக்கிய குழுவின் வலது மேற்பகுதியில் வழங்கப்பட்டுள்ள அழைப்புக்களை மேற்கொள்வதற்கான குறியீட்டை சுட்டுவதன் மூலம் நீங்கள் இணைத்த நண்பர்களுடன் ஒரே நேரத்தில் உரையாட முடியும். இவ்வாறு ஒரே நேரத்தில் 50 நண்பர்களுடன் உரையாடுவதற்கான வசதி இதில் வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள ஒரு குழுவில் உள்ள நண்பர்களுடனும் உரையாடலை மேற்கொள்ளலாம். இதன் போது உரையாட வேண்டிய நண்பர்களை தெரிவு செய்வதற்கான வசதியும் தரப்பட்டுள்ளது.
குழு உரையாடலின் போது தற்போதைக்கு இது குரல் அழைப்புக்களுக்கு மாத்திரமே ஆதரிக்கிறது. எனினும் இதில் குழு வீடியோ அழைப்புக்களை மேற்கொள்வதற்கான காலமும் அவ்வளவு தூரம் இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
எனவே இனி நீங்கள் தவறவிட்ட பாடசாலை வகுப்பறையை மீண்டும் உருவாக்கிக் கொள்ளலாம்.
இன்றைய தொழில்நுட்பத்தை அனுபவியுங்கள் தோழர்களே!
No comments:
Post a Comment