Wednesday, 23 March 2016

அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள வட்ட அலுவலகங்களில் வாக்காளர் சேவை மையம் :: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட அலுவலகங்களிலும் வாக்காளர் சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியரும், மாவட்டத்தேர்தல் நடத்தும் அலுவலருமான என்.சுப்பையன்.

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள வாக்காளர் சேவை மையத்தின் செயல்பாடுகளை திங்கள்கிழமை ஆய்வுசெய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:
நூறு சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துவதற்காகவும், நூறு சதவீத வாக்காளர்களைப் பட்டியலில் சேர்ப்பதற்காகவும், நூறு சதவீதம் வாக்குப்பதிவு நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதிய வாக்காளர்களை சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு வட்ட அலுவலகத்திலும் வாக்காளர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் அடையாள அட்டை காணாமல் போனவர்கள் மாற்று அடையாள அட்டை கோரி விண்ணப்பம் செய்பவர்களுக்கு ஒரு வாரத்தில் கொடுக்கப்படும். பிற சந்தேகங்களுக்கும் இம்மையத்தில் விளக்கம் அளிக்கப்படும். வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல், திருத்தம் செய்தல் போன்றவை கோரி இணையவழி மூலம் 25,000 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
தவிர நேரடியாக 22,000 பேர் மனு அளித்துள்ளனர். வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை மார்ச் 25-ம் தேதி இறுதி செய்யப்பட்டு, ஏப்ரல் முதல் வாரத்தில் அறிவிக்கை செய்யப்படும்.
மேலும் தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகத் தனியாக இந்திய தகவல் சேவை அலுவலர் நார்சிங்தேவ் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏப்.9-ம் தேதி வருகிறார். இவர் வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, கடந்த தேர்தல்களில் எங்கெங்கு
வாக்குப்பதிவு குறைவாகப் பதிவானதோ அங்கெல்லாம் விழிப்புணர்வு பணி மேற்கொள்வது போன்ற பணிகளை மேற்கொள்வார் என்றார் ஆட்சியர்.

No comments:

Post a Comment