இன்றளவில் பெருகி வரும் கொசுக்களால் டெங்கு, மலேரியா போன்ற நோய்களுக்கு மக்கள் ஆளாகின்றனர். இந்த நோயின் தாக்கம் மரணம் வரைகூட கொண்டு செல்லும். கொசுக்களை தவிர்க்க கெமிக்கல் கலந்த கொசுவிரட்டிகளை பயன்படுத்தும்போது பாதிப்புகளும் அதிகம். இதற்கு மாற்றாக இயற்கை முறையில் கொசுக்களை விரட்டும் வழிகளைப் பற்றி பார்க்கலாம்.
*கொசுக்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க தேங்காய் எண்ணெய் தடவினால் போதுமானது என்று வாட்ஸஅப் வதந்திகள் பரவி வருகின்றன. தேங்காய் எண்ணெயால் ஒரளவு மட்டுமே தாக்குபிடிக்க முடியும். மருந்து கடைகளில் கிடைக்கும் நொச்சி எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்து தடவினால் கொசுக்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்கலாம்.
*இதேபோல், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய்விட்டு கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வீசுவது மட்டுமல்ல... கொசுக்களும் நெருங்காது.
*புதினாவை சிறிது நீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தெளித்தால், இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்து விடும்.
*வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி இலைகளை கைப்பிடியளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுவதன் மூலம் கிடைக்கும் பச்சிலை தைலத்தை கொசுவிரட்டியாக பயன்படுத்தலாம். கை, கால், பாதங்களிலும் சிறிதளவு தடவினால், பச்சிலை தைலத்தின் நெடி தாங்காமல் கொசு ஓடிவிடும். மேற்சொன்ன பச்சிலையை உலர வைத்து, அதில் கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை என இருவேளைகளிலும் வீட்டுக்கு சாம்பிராணி புகை காட்டலாம்.
*பூண்டு எண்ணெயையும், தண்ணீரையும் 1:5 என்ற கணக்கில் கலந்து துணியில் தோய்த்து, ஜன்னல், கதவு மற்றும் வீட்டில் துளையுள்ள இடங்களில் தொங்கவிட்டால் கொசுக்கள் உள்ளே வராது.
*கற்பூரத்தை ஒரு தட்டில் வைத்து எரித்து வீடு முழுக்க காட்டலாம் அல்லது தண்ணீரில் கற்பூரத்தைப் போட்டு வைக்கலாம். இதனால் ஈக்கள் முழுவதும் கட்டுப்படுத்தப்படும். ஆனால் கொசுக்களை ஓரளவே கட்டுப்படுத்தலாம்.
*யூகலிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது. ஆஸ்துமா நோயாளிகள் கொசுவினை விரட்ட புகைபோடுவதை தவிர்ப்பது நல்லது.
No comments:
Post a Comment