Wednesday, 7 September 2016

துபாயில் கடலில் சிக்கியவர்களை மீட்க நவீன ரோபோ துபாயில் அறிமுகம்!

துபாய்: 

வளைகுடா நாடுகளில் முதல் முறையாக கடற்கரை பகுதியில் மீட்பு பணிகளுக்காக புதிதாக அதிநவீன ரோபோக்களை துபாய் மாநகராட்சி அறிமுகம் செய்துள்ளது. இவை கடற்கரையில் மீட்புக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது. துபாய் கடற்கரை பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கானோர் வருகை தருகின்றனர். இவர்களில் பலர் கடலில் நீந்தி விளையாடுகின்றனர். இந்நிலையில் கடலில் ஏற்படும் பருவநிலை மாற்றம், திடீர் சீற்றம், ராட்சத அலைகள் போன்றவற்றில் சிலர் சிக்கிகொள்ளும் சூழல் ஏற்படும்போது கடற்கரை மீட்பு குழுவினர் உடனடியாக சென்று காப்பாற்றுவர். ஆனால், கடலில் ஆபத்தில் சிக்கியவர்களை மீட்க கடலில் மீட்புக் குழுவினர் செல்வதை காட்டிலும் 12 மடங்கு அதிவேகமாக அருகில் சென்று மீட்கும் வகையில் தற்போது அறிமுகபடுத்தப்பட்டுள்ள ரோபோ செயல்படும். இவை மணிக்கு 35 கிமீ வேகத்தில் செயல்படும். 
இந்த ரோபோ தொடர்ந்து 130 கிமீ தொலைவு வரை பயணம் செய்யும் வகையில் சக்திவாய்ந்த பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளது. சிவப்பு நிறத்தில் ரப்பர் பொருட்களால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோக்களை கடலில் சிக்கியவர்கள் எளிதில் அடையாளம் காண முடியும். இவை கடலில் தத்தளிப்பவர்களின் அருகில் சென்றவுடன் சிறிய படகுபோன்று விரியும் தன்மையுடையது. இவற்றை தூரத்தில் இருந்து ரிமோட் மூலம் மீட்பு குழுவினர் இயக்க முடியும். 
கடலில் சிக்கியவர்கள் இப்படகில் ஏறியவுடன் அவர்களை மீட்டு கரைக்கு இந்த ரோபோ படகு திரும்பும். 5 பேர் வரை இந்த ரோபோ மூலம் மீட்க முடியும். இந்த ராட்சத அலையிலும் செயல்படும் வகையிலும் ரேடியோ அலைக்கற்றைகள் மூலம் கட்டுப்படுத்தபடுவதால் தொலைத்தொடர்பு பாதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

No comments:

Post a Comment