ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு சார்பில் விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த திமுக ஆட்சியில் வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து வந்த அதிமுக ஆட்சியில் மடிக்கணினி, மிக்சி, கிரைண்டர்., மின்விசிறி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
இந்நிலையில், தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா பொருட்கள் ஆந்திராவில் விற்கப்படுவதை பல்வேறு செய்தி நிறுவனங்களும் ஆதாரத்தோடு செய்தியாக்கின. மக்களுக்கு வழங்குவதற்காக தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட பொருட்கள் அடிமாட்டு விலைக்கு வெளிமாநிலங்களில் விற்பனையாகி அதிர்ச்சியை உருவாக்கின.
இதேபோல், தமிழக அரசு சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்காக வழங்கப்பட்ட விலையில்லா ஸ்கூல் பேக்ஸ் ஆப்ரிக்காவில் விற்கப்படுவது தெரியவந்துள்ளது. இதன் புகைப்படங்கள் இணையங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன.
நைஜீரியாவுக்கு மேற்கே அமைந்துள்ள பெனின் நாட்டில் தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்காக வழங்கும் பைகள் விற்கப்படுகின்றன. இந்திய மதிப்பில் ரூ.135-க்கு இந்த பைகள் பெனினில் விற்கப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
தமிழக மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்காக வழங்கப்படும் இத்தகைய விலையில்லா பொருட்கள் ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்றது எப்படி? இதில் யார் யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்று அரசு கண்டறிவதுடன், ஏழை, எளிய மக்களை சென்றடைய வேண்டிய பொருட்களை திருடி கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்து தரப்பினரது கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment