Tuesday, 23 August 2016

சவுதி அரேபியாவில் வேலையின்றி சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உடனே தாயகம் திரும்புமாறு சுஷ்மா சுவராஜ் வேண்டுகோள


      புதுடெல்லி, சவுதி அரேபியாவில் வேலையின்றி சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உடனடியாக இந்தியா திரும்பும் மாறு மத்திய வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டுள்ளார். சவுதி அரேபியா, குவைத், கத்தார், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியற்றி வருகின்றனர். எண்ணெய் வளமிக்க இந்த நாடுகளில் இயங்கி வரும் கட்டுமான நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் போன்றவற்றில் தொழிலாளர்களாக இவர்கள் வேலை செய்து வருகின்றனர். இதில் அதிகபட்சமாக சவுதி அரேபியாவில் மட்டும் 30 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. இதைப்போல குவைத், கத்தார், ஓமன் போன்ற நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையில் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த வளைகுடா நாடுகளின் வளர்ச்சிக்கு மூலகாரணமே எண்ணெய் வளம்தான். கச்சா எண்ணெயின் விலை மதிப்பை வைத்தே இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி நிர்ணயிக்கப்படுகிறது. சமீபகாலமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் பாதிப்படைந்து வருகிறது. அதிலும் சவுதி அரேபியா மற்றும் குவைத் நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதனால் இந்த நாடுகளில் இயங்கி வரும் மிகப்பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்த நிறுவனங்கள் தற்போது படிப்படியாக மூடப்பட்டு வருகின்றன. இதனால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர். இவ்வாறு வேலையும், சம்பளத்தையும் இழந்த இந்தியர்கள் கடந்த பல நாட்களாக பசி, பட்டினியில் வாடி வருகின்றனர். கையில் பணம் இல்லாததால் நாடு திரும்ப முடியாமல் கடும் இன்னலில் சிக்கி உள்ளனர். உணவின்றிப் பரிதவித்த அவர்களுக்காக இந்திய தூதரகம் சார்பில் சவுதி முழுவதும் 20 முகாம்கள் அமைக்கப்பட்டு உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களைப் பத்திரமாக இந்தியா அழைத்து வருவது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை இணையமைச்சர் வி.கே.சிங் இந்த மாத தொடக்கத்தில் சவுதி சென்றார். அவரது முயற்சியால் கடந்த 12-ம் தேதி 26 இந்தியர்கள் நாடு திரும்பினர். இந்நிலையில் அமைச்சர் வி.கே.சிங் 2-வது முறையாக கடந்த புதன்கிழமை சவுதி சென்றார். ஆனால், பாதிக்கப்பட்டோர், ‘வெறும் கையுடன் நாங்கள் நாடு திரும்ப முடியாது. எங்கள் வேலைக்கான சம்பளத்தை நிறுவனங்கள் வழங்க வேண்டும். அதுவரை சவுதியில் இருந்து வெளியேறமாட்டோம்’ என்று தெரிவித்தனர். இந்நிலையில் டுவிட்டரில் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது: “உங்களது கோரிக்கைகளை தூதரகத்தில் பதிவு செய்துவிட்டு உடனடியாக நாடு திரும்புங்கள். உங்கள் பயணச் செலவுகளை அரசு ஏற்கும்.. சவுதி அரசு உடனான நிறுவனங்களின் பேச்சுவார்த்தை தொடர்ந்து நீண்டு கொண்டிருப்பதால் அங்கு காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை. மூடப்பட்ட நிறுவனங்களுடனான சவுதி அரசின் பேச்சுவார்த்தை முடிந்த பிறகு உங்கள் அனைவரது சம்பள நிலுவை பிரச்சினையும் தீர்த்து வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment