Tuesday, 28 June 2016

சமூக வலைத்தளங்களில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரனுக்கு குவியும் கண்டனங்கள்!


சுவாதி கொலை சம்பவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்ட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றிவந்த சுவாதி என்ற இளம்பெண் மனிதாபிமானமற்ற முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியுள்ளது.
கொலை சம்பவம் நிகழ்ந்து 4 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் காவல்துறையினரால் இன்னமும் குற்றவாளியை பிடிக்க முடியவில்லை, இவ்வழக்கில் சிசிடிவி கேமிராவில் சிக்கிய மர்ம நபரை தேடும் பணியில் காவல்துறை தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
இந்நிலையில், சுவாதி மரணம் குறித்து சமூக வளைத்தளங்களில் பரபரப்பான விவாதங்களும் நடைபெற்று வருகின்ற வேளையில் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தனது முகநூல் பக்கத்தில் நேற்றைய தினம் கருத்து ஒன்றினை பதிவிட்டிருந்தார். 
மத மோதல்களை உருவாக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக் கூறி நடிகர்
ஒய்.ஜி.மகேந்திரனுக்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.   
இதனிடையே, சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியைத் தெரியும் எனக் கூறிய நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனை கைது செய்ய வேண்டும் என்று இந்திய தேசிய  லீக் கட்சித் தலைவர் அப்துல் ரஹீம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
 இதன் மூலம், சுவாதி கொலை சம்பவம் மத சாயம் பூசப்பட்டு வேறு பாதையில் பயணிப்பதாகவும், வேதனை அளிப்பதாகவும் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment