Thursday, 16 June 2016

நாட்டின் முதலாவது விமான போக்குவரத்து கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் நடுத்தர மக்களும் விமானத்தில் பயணம்செய்ய கட்டணம் குறையும்

இந்தியா:

நாட்டின் முதலாவது விமான போக்குவரத்து கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் நடுத்தர மக்களும் விமானத்தில் பயணம்செய்ய கட்டணம் குறையும்:
        நாட்டின் முதலாவது சிவில் விமான போக்குவரத்து கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. நடுத்தர மக்களும் விமானத்தில் பயணம் செய்ய கட்டணம் குறையும்.
முதல் விமான போக்குவரத்து கொள்கை:
       நமது நாட்டின் முதலாவது தேசிய ஒருங்கிணைந்த சிவில் விமான போக்குவரத்து கொள்கைக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.இது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரி அசோக் கஜபதி ராஜூவும், ராஜாங்க மந்திரி மகேஷ் சர்மாவும் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
இரண்டாவது நிலை நகரங்களையும், மூன்றாவது நிலை நகரங்களையும் விமான போக்குவரத்தின்மூலம் இணைக்க வேண்டும்; தங்களுக்கு அருகாமையில் உள்ள நகரங்கள் வாயிலாக நாட்டில் உள்ள கிட்டத்தட்ட 35 கோடி நடுத்தர மக்களும் மலிவான கட்டணத்தில் விமானத்தில் பயணம் செய்யும் வாய்ப்பு உருவாக்கி தருவதும்தான், தேசிய ஒருங்கிணைந்த சிவில் விமான போக்குவரத்து கொள்கையின் முக்கிய நோக்கம் ஆகும்.ரூ.2,500 கட்டணம்
     இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் இடையேயான விமான பயண கட்டணம், எல்லா வரிகளையும் சேர்த்து (ஒரு மணி நேர பயணத்துக்கு) ரூ.2,500–ஐ தாண்டாது என்பதை இந்த சிவில் விமான போக்குவரத்து கொள்கை உறுதி செய்யும்.விமான பயண கட்டணம் குறைவாக இருக்கும் விதத்தில், சேவை வரியாக 1.2 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்படும். மேலும், விமான எரிபொருள் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைக்கும்படி மாநில அரசுகளை அறிவுறுத்துவோம்.பிராந்திய தடங்கள் இடையே சிவில் விமான போக்குவரத்தை விமான நிறுவனங்கள் சுமுகமாக நடத்துகிற வகையில், நிதியம் ஒன்றை அரசு உருவாக்கும். இதற்காக அனைத்து உள்நாட்டு விமான போக்குவரத்துக்கும் சிறு அளவிலான வரி விதிக்கப்படும்.விமான நிலையங்கள் மேம்பாடு
     மாநில அரசுகள் கேட்டுக்கொள்வதற்கு இணங்க விமான நிலையங்களை ரூ.80 கோடியில் இருந்து ரூ.100 கோடி வரையிலான முதலீட்டில் மேம்படுத்துகிறபோது, மாநில அரசுகள் பல்வேறு வகைகளில் வரி நிவாரணங்களை வழங்குவதோடு, வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.புதிய விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வருவதற்கு 2 அல்லது 3 மாதங்கள் ஆகலாம். முதல் கட்டமாக 50 புதிய விமான நிலையங்கள் செயல்பாட்டுக்கு வரும். இரண்டாவது உலகப்போரின்போது 350 விமான நிலையங்கள் உருவாக்கப்பட்டன. அவை உபயோகத்தில் இல்லை. தேவை, வசதிவாய்ப்பு, நீடித்து நிலைத்து நிற்கக்கூடிய சூழல் ஆகியவற்றின் அடிப்படையில் அவற்றை நாங்கள் மேம்படுத்துவோம். அவையெல்லாம் அரசாங்கத்துக்கும், சிவில் விமான போக்குவரத்துக்கும் தங்க சுரங்கம் போன்றதாகி விடும்.பன்னாட்டு சேவை
    எல்லா விமான நிறுவனங்களும் பன்னாட்டு சேவைகளை தொடங்கலாம். ஆனால் அதற்காக உள்நாட்டு சேவைக்கு 20 விமானங்கள் அல்லது மொத்த கொள்திறனில் (இருக்கை எண்ணிக்கை) 20 சதவீதம், இவ்விரண்டில் எது அதிகமோ அதை வழங்க வேண்டும்.வலுவான பாதுகாப்பு மேற்பார்வை அமைப்புக்காகவும், விமான போக்குவரத்து தொடர்பான பிரச்சினைகளில் வெளிப்படையான ஒற்றைச்சாளர அமைப்பை உருவாக்கவும் சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனருக்கு தேவையான நிர்வாக வசதி மற்றும் நிதி வசதி செய்து தரப்படும்.தனியார் துறை
     மாநில அரசுகள், தனியார் துறையினர், பொதுத்துறையினரும் தனியார் துறையினரும் கூட்டாகவும் விமான நிலையங்கள் ஏற்படுத்துவது தொடர்ந்து ஊக்குவிக்கப்படும்.இந்திய விமான நிலையங்களின் ஆணையம், தொடர்ந்து தனது விமான நிலையங்களை நவீனமயமாக்கும். சேவை தரத்தை உயர்த்தும்.தனியான ஒழுங்குமுறைகளை ஏற்படுத்தி ஹெலிகாப்டர் சேவைகளை அரசு தொடங்கும். முதல் கட்டமாக 4 ஹெலிகாப்டர் மையங்கள் மேம்படுத்தப்படும். ஹெலிகாப்டர் அவசர கால மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு, அனைத்து முகமைகளுடனும், பங்குதாரர்களுடனும் சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒருங்கிணைந்து செயல்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment