திருச்சி:
சிறந்த பராமரிப்பு பணி;பயணிகளுக்கு சேவையில் தென் இந்தியாவில் முதல் இடம்!இந்திய அளவில் திருச்சி விமானநிலையம் 6-வது இடம் பிடித்தது விமானநிலைய இயக்குனர் பேட்டி:
சிறந்த பராமரிப்பு பணிக்காக திருச்சி விமான நிலையம் இந்திய அளவில் 6-வது இடத்தை பிடித்துள்ளது என விமானநிலைய இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.
திருச்சி விமானநிலைய இயக்குனர் குணசேகரன் விமானநிலைய அலுவலகத்தில் நிருபர்களுக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா முழுவதும் 53 சர்வதேச விமானநிலையங்கள் உள்ளன. விமானநிலையங்களில் சிறந்த பராமரிப்பு பணிகளை செய்துள்ளது குறித்து நொய்டாவை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் விமானநிலையத்தில் கழிப்பறையை சுத்தமாக வைத்தல், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தல் உள்பட 36 வகையான சாராம்சங்களை ஆராய்ந்து, தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில் இந்திய அளவில் சண்டிகார் விமானநிலையம் முதல் இடத்தை பிடித்துள்ளது. திருச்சி விமானநிலையம் 4.66 புள்ளிகள் பெற்று இந்திய அளவில் 6-வது இடத்தையும், தமிழகம், கேரளம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களை கொண்ட தென் மண்டல அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டில் 4.9 புள்ளிகள் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்திய அளவில் திருச்சி விமான நிலையம் முதல் இடத்தை பிடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். திருச்சி விமானநிலையத்திற்கு பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விமானநிலைய விரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. விமானநிலைய முனையம் விரிவாக்கத்திற்கு ரூ.900 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பணிகள் தொடங்கப்படும். திருச்சி விமானநிலைய ஓடுதள பாதை விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். நிலம் கையகப்படுத்திய பின் பணிகள் தொடங்கும்.
திருச்சியில் இருந்து பெங்களூரு, மும்பைக்கு விமானங்கள் இயக்க 2 தனியார் விமான நிறுவனங்களிடம் பேசப்பட்டுள்ளது. அந்நிறுவனத்தினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் பெங்களூரு, மும்பைக்கு திருச்சியில் இருந்து விமானங்கள் இயக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment