Sunday, 29 May 2016

ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க அதிநவீன கருவி!


ரேஷன் கடைகளில் முறைகேடுகளை தடுக்க ‘பாயிண்ட் ஆப் சேல்’ என்ற அதிநவீன கருவி முதல்கட்டமாக ஜூலை 1-ந் தேதி முதல் 4 மாவட்டங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
ரேஷன் கடையில் பொருட்கள் வழங்குவதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் வருகின்றன. பெரும்பாலான ரேஷன் கடைகளில் முதல் வாரத்திற்கு பின்னர் பொருட்கள் வழங்கப்படுவதில்லை, ஒரு மாதம் கூட நுகர்வோர் பொருட்களை முழுமையாக பெற முடிவதில்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன.
இதுபோன்ற முறைகேடுகளை தடுக்கவும், ரேஷன் கடைகளில் காகித பயன்பாட்டை குறைக்கவும் தமிழக அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்காக ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் சிம்கார்டுகள் மூலம் செயல்படும் ‘பாயிண்ட் ஆப் சேல்’ என்ற அதிநவீன கருவியை அறிமுகம் செய்து உள்ளது.
Advertisement
அனைத்து குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள், செல்போன் எண், ஆதார் எண்கள் அனைத்தும் அந்த கருவியில் பதிவு செய்யப்படும். அவர்களுக்கு வழங்க வேண்டிய பொருட்கள் விவரமும் இக்கருவியில் பதிவு செய்யப்படும்.
குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கும்போது இந்த கருவியில் அந்த விவரம் பதிவு செய்யப்படும். அவர்கள் வாங்கிய பொருட்களின் விவரம், அளவு, விலை, மொத்த தொகை, இன்னும் வாங்க வேண்டிய பொருட்களின் விவரங்கள் உடனடியாக அவர்களது செல்போனுக்கு குறுஞ்செய்தியாக (எஸ்.எம்.எஸ்.) மூலம் தெரிவிக்கப்படும்.
இதனால் கடையில் பில் வழங்கப்பட மாட்டாது. இதன்மூலம் விற்பனையாளர்களின் வேலை பளுவும் குறையும்.
இந்த கருவியை சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ளது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் இந்த கருவி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. அடுத்தகட்டமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இந்த கருவி அறிமுகம் செய்யப்படுகிறது.
அடுத்ததாக இந்த திட்டம் படிப்படியாக தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்பட இருப்பதாக உணவுபொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment