Tuesday, 24 May 2016

அனுமதித்த அளவுக்கு மேல் பூச்சிக்கொல்லி மருந்துமாம்பழ ஏற்றுமதிக்கு தடை வரும் அபாயம்: ஐக்கிய அரபு எச்சரிக்கையால் சிக்கல்.

புதுடெல்லி:  

இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களில் 70 சதவீதம் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு  செல்கின்றன. இப்படிப்பட்ட  ஒரு சூழ்நிலையில் ஐக்கிய அரசு எமிரேட்சின் புவி வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில் ஒரு தகவல் இந்தியாவின் கவனத்துக்கு வந்துள்ளது.
மாம்பழங்களில் மட்டுமல்ல, மிளகாய், மிளகு, வெள்ளரிக்காய்களிலும் அதிக அளவு பூச்சிக்கொல்லி மருந்து படிந்துள்ளது என்று அந்த அமைச்சகம்  சுட்டிக்காட்டியிருக்கிறது. இந்தியாவில் இருந்து கன்டெய்னர்களில் வந்த மாம்பழம், மிளகு போன்றவற்றை சோதித்ததில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல்  பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த விவரத்தை ஏற்றுமதி செய்த நிறுவனத்துக்கு கூறியுள்ளோம் என்று விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய  (ஏபிஇடிஏ) அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்பவர்கள் இந்த ஆணையத்தில் கட்டாயம் பதிவு  செய்ய வேண்டும்.  
பூச்சிக்கொல்லி மருந்து விவகாரம் இந்திய மாம்பழ ஏற்றுமதியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மாம்பழம் உள்ளிட்ட விவசாய உற்பத்தி  பொருட்களை ஏற்றுமதி செய்யும் இந்திய ஏற்றுமதியாளர்கள், அத்துடன் பூச்சிக்கொல்லி மருந்து குறைவாக உள்ளதா என்பது குறித்த ஆய்வு அறிக்கையையும்  இணைத்து அனுப்புமாறு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கேட்டுக்கொண்டுள்ளது.
4 ஆண்டாக தொடரும் பிரச்னை
கடந்த நான்கு ஆண்டுகளில் பூச்சிக்கொல்லி மருந்து விவகாரம் காரணமாக இந்திய மாம்பழ ஏற்றுமதி கடும் சிக்கலை சந்தித்தது. இதனால் மூன்றில் ஒரு பங்கு  ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. 2011-12 நிதியாண்டில் 63,594 டன் மாம்பழங்கள் ஏற்றுமதியாகின. 2014-15 நிதியாண்டில் இது 43,191 டன்களாக சரிந்தது. எனவே, நடப்பு ஆண்டில்  ஏற்றுமதி செய்பவர்கள் ஏபிஇடிஏ அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் பூச்சிக்கொல்லி மருந்து அளவு பரிசோதனை செய்து அனுப்புமாறு விவசாயத்துறை  கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

Post a Comment