Saturday, 23 April 2016

சவூதி அரேபியாவில் ஈரான் தாக்குதல், இழப்பீடு வழங்க அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு!


அமெரிக்காவால் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளிலிருந்து, பயங்கரவாதத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, திருட்டுக்கு சமமானது என ஈரான் சாடியுள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹுசேன் ஜாபர் அன்சாரி வியாழக்கிழமை கூறியதாவது:
பயங்கரவாதத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஈரானின் முடக்கப்பட்ட சொத்திலிருந்து நஷ்ட ஈடு வழங்கும் அமெரிக்க அரசின் முடிவுக்கு அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது, ஈரானின் சொத்தை திருடுவதற்கு சமமானது. மேலும் இந்த முடிவு சர்வதேச சட்டத்துக்கு எதிரானது என்றார் அவர்.
லெபானான் தலைநகர் பெய்ரூட்டில், சர்வதேச அமைதிப் படையைச் சேர்ந்த அமெரிக்க மற்றும் பிரான்ஸ் வீரர்கள் தங்கியிருந்த கட்டடங்களில் கடந்த 1983-ஆம் ஆண்டு தற்கொலை கார் குண்டுத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன.
இதில் 241 அமெரிக்க வீரர்களும், 58 பிரான்ஸ் வீரர்களும் பலியாகினர். அதேபோல், சவூதி அரேபியாவில் அமெரிக்க வீரர்கள் தங்கியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நிகழ்த்தப்பட்ட கார் குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
இந்த இரு தாக்குதல்களில் ஈரானுக்குத் தொடர்பிருப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில், அமெரிக்காவில் முடக்கி வைக்கப்பட்டிருக்கும் ஈரான் சொத்துகளிலிருந்து, அந்த இரு தாக்குதல்களிலும் பாதிக்கப்பட்ட 1,000-க்கும் மேற்பட்டோருக்கு இழப்பீடு வழங்க அமெரிக்க அரசு முடிவு செய்தது.
இந்த முடிவுக்குத் தடை விதிக்கக் கோரி ஈரான் ரிசர்வ் வங்கி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனுவை வியாழக்கிழமை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், ஈரானின் சொத்துகளில் இருந்து பெய்ரூட் மற்றும் சவூதி தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கலாம் என்று தீர்ப்பளித்தது.

No comments:

Post a Comment