ரியாத்: எண்ணெய் வளத்தை மட்டுமே சார்ந்திராமல், பிற தொழில்களை ஊக்குவிக்கும் வகையில்,மாபெரும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு, சவுதி அரேபியா நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான, சவுதி அரேபியா, எண்ணெய் வளத்தை மட்டுமே முழுவதும் நம்பி உள்ளது. உலகின் பெரும்பாலான வாகனங்கள், பெட்ரோல் அல்லது டீசலில் ஓடுவதால், எண்ணெய் வர்த்தகத்தின் மூலம், சவுதி அரேபியா செல்வச்செழிப்பில் கொழித்து வந்தது.
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளதால், சவுதி அரேபியாவின் வருவாயும் வெகுவாக குறைந்தது. கடந்தாண்டில், சவுதி அரேபியாவின் மொத்த வருவாயில், 75 சதவீதம் மட்டுமே, எண்ணெய் மூலம் கிடைத்து உள்ளது.
விற்பனை செய்ய திட்டம்
எதிர்காலத்தில் எண்ணெய் வர்த்தகத்தை மட்டுமே சார்ந்திருக்க முடியாது என்ற எண்ணம், சவுதி அரேபியா அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வரும் 2030க்குள், சவுதி அரேபியாவில், பிற தொழில்களை ஊக்குவிக்கும் வகையில், மாபெரும் பொருளாதார சீர்திருத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தில் ஒன்று, அரசுக்கு சொந்தமான, எண்ணெய் வர்த்தக ஜாம்பவான் நிறுவனமான, 'அராம்கோ'வின் பங்குகளை விற்று, பொது நிதியத்தை உண்டாக்குவது. 165 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிறுவனத்தின் பங்குகளில், முதல் கட்டமாக, 5 சதவீதத்தை மட்டும் விற்க, தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா இளவரசர் முகம்மது பின் சல்மான், 30, 'விஷன் 2030' எனப்படும், சீர்திருத்த திட்டத்தை வெளியிட்டு கூறியதாவது:
சவுதி அரேபியாவின் பொருளாதாரம், முழுவதும், எண்ணெய் வளத்தை மட்டுமே நம்பியுள்ளது.
இதை மாற்றி, 2030க்குள், எண்ணெய் வளமின்றி நம்மால் ஜீவிக்க முடியும் என்ற நிலையை உருவாக்குவோம். அரசு நிறுவனமான, அராம்கோவின், 5 சதவீத பங்குகள் விற்கப்படும். இதில் கிடைக்கும் தொகையுடன் சேர்த்து, 130 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, பொது முதலீட்டு நிதியம் உருவாக்கப்படும்.
'கிரீன் கார்டு' முறை
சவுதி அரேபியாவில் புதிய, 'விசா'முறை அறிமுகப்படுத்தப்படும். சவுதி அரேபியாவில் தங்கியுள்ள வெளிநாட்டு முஸ்லிம்கள், அரேபியர்கள், நீண்ட காலமாக வசிக்க வகை செய்யும், 'கிரீன் கார்டு' முறை கொண்டு வரப்படும். கனிமச் சுரங்கங்கள், ராணுவ தளவாட உற்பத்தியை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படும். பணியிடங்களில் பெண்களின் பங்கை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சீர்திருத்தம் நிச்சயம்!
கடந்த, 2014ல், கச்சா எண்ணெய், ஒரு பேரல், 115 டாலருக்கு விற்கப்பட்டது. தற்போது, 40 டாலர் அளவில் விற்கப்படுகிறது.
இருப்பினும், ''எண்ணெய் விலை வீழ்ச்சிக்கும், அரசின் எதிர்காலத் திட்டத்துக்கும்சம்பந்தமில்லை,'' என, அந்நாட்டு இளவரசர் முகம்மது பின் சல்மான் கூறியுள்ளார்.
இளவரசர் முகமது பின் சல்மான் கூறியதாவது: எண்ணெய் விலை, மீண்டும் பழைய நிலைக்கு உயர்ந்தால், சவுதி அரசின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பேருதவியாக இருக்கும். இருப்பினும், அதிக விலை அவசியமில்லை என்றே கருதுகிறோம். குறைந்தபட்ச விலையை வைத்து கூட, சீர்திருத்த திட்டங்களை நிறைவேற்றி விட முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
கலங்கடித்த விலை வீழ்ச்சி
சவுதி அரேபியாவில் கிடைக்கும் அபரிமிதமான எண்ணெய் வளத்தால், அந்நாடு, மிகப்பெரும் பொருளாதாரமாக உருவெடுத்துள்ளது. ஆனால்,சமீப காலமாக, எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
2014ம் ஆண்டு மத்தியில் இருந்த விலையில், பாதிக்கும் குறைவான விலையில், கச்சா எண்ணெய் வர்த்தகம் ஆகிறது. இதனால், பெரியளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைவீழ்ச்சி அடைந்ததால், மற்றொரு எண்ணெய் உற்பத்தி நாடான அங்கோலாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால், ஐ.எம்.எப்., எனப்படும், சர்வதேச நிதியத்தின் உதவியை, அங்கோலா நாடியது. அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதில், சவுதி அரேபியா அரசு உறுதியாக உள்ளது.
இருப்பினும், சவுதி அரேபியாவின் எண்ணெய் வளம், அசுர வேகத்தில் குறைந்து வருகிறது. அந்நாட்டின் மொத்த வருவாயில், 75 சதவீத பங்கு, எண்ணெய் மூலமே கிடைக்கிறது. இதனால், இப்போதே, தக்க மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என, சவுதி அரசு கருதுகிறது.
ரூ.9 லட்சம் கோடி காலி!
* சவுதி அரேபியாவின் மொத்த வருவாயில்,75 சதவீதம், எண்ணெய் மூலம் கிடைக்கிறது
* கடந்த, 2015 பட்ஜெட்டில், 6.35 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டது
* அரசு நிறுவனமான, அராம்கோவின் மதிப்பு, 165 லட்சம் கோடி ரூபாய்
* சவுதி அரேபியா அரசு உருவாக்கவுள்ள பொது முதலீட்டு நிதியத்தின் மதிப்பு, 130 லட்சம் கோடி ரூபாய்
* எளிதில் வாங்கக் கூடிய விலையிலான வீடுகளை அதிகளவில் கட்ட, திட்டமிடப்பட்டுள்ளது
* சவுதி அரேபியாவில் பணியாற்றும், வெளிநாடுகளை சேர்ந்த ஒரு கோடி பேர், வருவாய் முழுவதையும், தம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்
* வெளிநாட்டவர், நீண்ட காலம் தங்க உதவும், 'கிரீன் கார்டு' முறையால், அவர்களின் வருவாய் மீண்டும், சவுதி அரேபியாவில் முதலீடு செய்யப்படும் என, அரசு நம்புகிறது
ரூ.9 லட்சம் கோடி காலி!
* சவுதி அரேபியாவின் மொத்த வருவாயில்,75 சதவீதம், எண்ணெய் மூலம் கிடைக்கிறது
* கடந்த, 2015 பட்ஜெட்டில், 6.35 லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டது
* அரசு நிறுவனமான, அராம்கோவின் மதிப்பு, 165 லட்சம் கோடி ரூபாய்
* சவுதி அரேபியா அரசு உருவாக்கவுள்ள பொது முதலீட்டு நிதியத்தின் மதிப்பு, 130 லட்சம் கோடி ரூபாய்
* எளிதில் வாங்கக் கூடிய விலையிலான வீடுகளை அதிகளவில் கட்ட, திட்டமிடப்பட்டுள்ளது
* சவுதி அரேபியாவில் பணியாற்றும், வெளிநாடுகளை சேர்ந்த ஒரு கோடி பேர், வருவாய் முழுவதையும், தம் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்
* வெளிநாட்டவர், நீண்ட காலம் தங்க உதவும், 'கிரீன் கார்டு' முறையால், அவர்களின் வருவாய் மீண்டும், சவுதி அரேபியாவில் முதலீடு செய்யப்படும் என, அரசு நம்புகிறது
* கடந்த 2014ல், சவுதி அரேபியாவின் நிதி இருப்பு,49 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது
* தற்போதைய நிதி இருப்பு, ஒன்பது லட்சம் குறைந்து, 40 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து விட்டது
* தற்போதைய நிதி இருப்பு, ஒன்பது லட்சம் குறைந்து, 40 லட்சம் கோடி ரூபாயாக சரிந்து விட்டது
No comments:
Post a Comment