மருத்துவப் படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே பொது நுழைவுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளில் சேர பல்வேறு மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்வி நிறுவனங்களும் தனித்தனியாக நுழைவுத் தேர்வை நடத்தின.
CBSE எனப்படும் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் சார்பில் மத்திய கல்வி நிறுவனங்களுக்கான மருத்துவம், பல் மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டது. இந்த முறையை நீக்கி விட்டு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (என்இஇடி) என்ற பெயரில் பொது நுழைவுத் தேர்வு நடத்த மத்திய பள்ளிக் கல்வி வாரியத்திடம் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்த நடவடிக்கையை எதிர்த்து பல்வேறு தனியார் கல்லூரிகள், உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன.
அவற்றின் மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் நடவடிக்கைக்கு 2013-இல் தடை விதித்தது. இதை எதிர்த்து இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய அரசு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் முறையிட்டன.
இதை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை அண்மையில் விலக்கியது.
இந்நிலையில், மருத்துவப் படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டிலேயே பொது நுழைவுத் தேர்வை கட்டாயம் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கான தேதியை நாளை முடிவு செய்யப்படும் எனவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment