Saturday, 5 March 2016

ஐ.நா. பொருளாதாரத் தடைக்குப் பதிலடி தயார் நிலையில் அணு ஆயுதங்கள்: வட கொரிய அதிபர் உத்தரவு.


வட கொரியா மீது ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் இதுவரை இல்லாத அளவு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்ததற்குப் பதிலடியாக, தங்களிடமுள்ள அணு ஆயுதங்களைத் தயார் நிலையில் வைக்குமாறு வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் உத்தரவிட்டுள்ளார்.
 இதுகுறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது:
 கிழக்குக் கடல் பகுதியில் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை ஏவியை வட கொரியா வியாழக்கிழமை பரிசோதித்தது.
 அதிபர் கிம் ஜோங்-உன் அந்தப் பரிசோதனையை நேரில் பார்வையிட்டார்.
 அப்போது அவர் பேசுகையில், “வட கொரியாவின் அணு ஆயுதங்களை எப்போது வேண்டுமானாலும் எதிரி நாடுகளின் மீது தாக்குதல் நிகழ்த்துவதற்குத் தயாரான நிலையில் வைத்திருக்க வேண்டும்.
 கொரியத் தீபகற்பத்தில் பதற்ற நிலை அபாயகரமான அளவை எட்டிவிட்டதால், நம் மீது தாக்குதல் தொடுக்கப்படுவதைத் தடுக்கும் விதமாக முன்கூட்டியே தாக்குதல் நிகழ்த்த வட கொரியா தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
 பிற நாடுகளில் போரையும், பேரழிவையும் ஏற்படுத்த அமெரிக்கா துடித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில், வட கொரியாவின் இறையாண்மையையும், அந்த நாட்டு மக்களின் வாழும் உரிமையையும் நிலைநாட்ட, அணு ஆயுத பலமே உதவும்’ என்று கிம் ஜோங்-உன் கூறியதாக கே.சி.என்.ஏ. செய்தி நிறுவனம் தெரிவித்தது.
 வட கொரியா வியாழக்கிழமை நிகழ்த்திய பரிசோதனையில் 100 முதல் 150 கி.மீ. தொலைவுக்கு 6 ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
 ஐ.நா. தடையையும் மீறி ஹைட்ரஜன் அணுகுண்டு மற்றும் ராக்கெட் பரிசோதனையில் வட கொரியா ஈடுபட்டதற்குப் பதிலடியாக, அந்த நாட்டின் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் புதன்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.
 வட கொரியாவிலிருந்து நிலக்கரி, இரும்பு மற்றும் இரும்புத் தாது, தங்கம், டைட்டேனியம் மற்றும் அரிய வகைக் கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதற்கும், ராக்கெட் எரிபொருள் உள்ளிட்ட விமானங்களுக்குப் பயன்படும் எரிபொருள்களை வட கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யவும் அந்தத் தீர்மானத்தில் தடை விதிக்கப்பபட்டுள்ளது.
 வட கொரியாவின் பொருளாதாரத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய இந்தத் தடைக்குப் பதிலடியாகவே வட கொரியா மறைமுக அணு ஆயுத மிரட்டலை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
 கொரிய தீபகற்பத்தில் பதற்றம் ஏற்படும்போதெல்லாம் வட கொரியா இதுபோன்ற மிரட்டல்களை விடுப்பது வழக்கம் எனவும், வட கொரியாவிடம் அணு ஆயுதங்கள் இருந்தாலும், அவற்றை ஏவுகணைகளில் பொருத்தி பிற நாடுகள் மீது ஏவும் தொழில்நுட்பம் அந்த நாட்டிடம் இல்லை எனவும் சில பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்க வான் பாதுகாப்பு ஏவுகணைகள்: தென் கொரியா முடிவு
 சியோல், மார்ச் 4: வட கொரியாவின் அணு ஆயுத மிரட்டலை எதிர்கொள்ளும் விதமாக, தங்கள் நாட்டில் அமெரிக்காவின் “தாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தை நடத்த தென் கொரியா முடிவு செய்துள்ளது.
 இதுகுறித்து தென் கொரிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் கூறியதாவது:
 வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக அமெரிக்காவின் “தாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை எந்த இடத்தில், எப்போது நிறுத்துவது, அதற்கான செலவுகள் போன்ற விவகாரங்கள் பேச்சுவார்த்தையில் இடம் பெறும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
 தென் கொரியாவில் அமெரிக்க வான் பாதுகாப்பு ஏவுகணைகளை நிறுத்துவதற்கு சீனாவும், ரஷியாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment