குன்னம் அருகே வெளிநாட்டில் இருந்து வந்த வாலிபர் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் உடலை நடு ரோட்டில் வைத்து அவரது உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.வாலிபர் பலி
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமுகமது. இவரது மகன் ரபீக் முகமது அப்பாஸ் அலி (வயது 27). சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 18–ந் தேதி கீழப்பெரம்பலூருக்கு வந்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அரியலூரில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு பின்னர் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
திட்டக்குடி–அரியலூர் சாலையில் காரைப்பாடி பிரிவு அருகே வந்த போது அங்கு, தார்ச்சாலை போடுவதற்காக பெரிய ஜல்லி கற்கள் கொட்டப்பட்டு சிதறி கிடந்து உள்ளது. இதை கவனிக்காத அப்பாஸ் அலி மோட்டார் சைக்கியை ஜல்லிகற்கள் மேல் ஓட்டினார். இதனால் மோட்டார் சைக்கிள் சறுக்கியதில் அவர் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரபிக் முகமது அப்பாஸ் அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.சாலை மறியல் போராட்டம்
இதை அறிந்த ரபிக் முகமது அப்பாஸ் அலி உறவினர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, சாலையில் ஜல்லி கற்களை கொட்டியதால் தான் விபத்து நடந்தது என்று கூறி அவரது உடலை நடுரோட்டில் வைத்துக்கொண்டு நள்ளிரவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த குன்னம் சப்–இன்ஸ்பெக்டர் கணேசன், மங்களமேடு போலீஸ் துணை சூப்பிரண்டு ஜவகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் அப்பாஸ் அலி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ராஜா முகமது கொடுத்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment