Saturday, 5 March 2016

வெளிநாடுகளில் வேலை ஏமாற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள்.


வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, இளைஞர்கள் மற்றும் மாணவர்களை கோவையில் உள்ள சில தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஏமாற்றி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.
கோவை மாவட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட, வெளிநாடுகளில் வேலை வாங்கித் தரும் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பெரும்பாலான நிறுவனங்கள் குறைந்த செலவில் நுழைவு இசைவு (விசா), கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் வெளி நாடுகளில் அதிக ஊதியத்தில் வேலை வாங்கித் தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடுகின்றன.
அவ்வாறு விளம்பர அறிவிப்பைப் பார்த்து தொடர்பு கொள்ளும் இளைஞர்களையும், மாணவர்களையும் ஏமாற்றி பல லட்சம் பணம் பறித்து குறிப்பிட்ட நிறுவனங்களில் வேலை அல்லது கல்வி நிறுவனங்களில் இடம் வாங்கிக் கொடுக்காமல் வெளிநாடுகளில் கொடுமைப்படுத்தப்பட்டதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த இரு மாதங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
மேலும், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகள் இளைஞர்கள், மாணவர்களிடம் சுமார் ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை தவணை முறையில் அவர்களது வசதிக்கேற்ப பணம் வாங்கி விடுகின்றனர். இதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நாட்டுக்கு அனுப்புவதற்கு பதிலாக வேறு நாடுகளுக்கு அல்லது அதே நாட்டுக்கு வேலைவாய்ப்பு விசாவுக்கு பதிலாக சுற்றுலா விசா கொடுத்து அனுப்பி விடுகின்றனர்.
அவ்வாறு அங்கு செல்லும் இளைஞர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். அங்கு சரிவர உணவு கிடைக்காதது, குறைந்த அளவிலான மாத ஊதியம், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாதது ஆகியவற்றால் துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றனர். இதில், ஒரு சிலர் அங்குள்ள நண்பர்கள், அல்லது உறவினர்களின் உதவியால் மீண்டும் நாடு திரும்பி விடுகின்றனர்.
ஆனால், வசதியற்ற ஒரு சில இளைஞர்கள் குடும்ப சூழ்நிலையைக் கருதி குறிப்பிட்ட காலம் முடிவடையும் வரை பணியில் இருந்து விட்டு நாடு திரும்புகின்றனர். மேலும், நிதிப் பற்றாக்குறையால் பசி, பட்டினி உள்ளிட்ட கொடுமைகளால் இளைஞர்கள் உயிரிழக்கும் துயரச் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன.
மாணவர்களைக் குறிவைக்கும் நிறுவனங்கள்: பிளஸ் 2 படித்த மாணவ, மாணவிகளை ரஷியாவில் புகழ்பெற்ற அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு ஆண்டுக்கு ரூ.4 லட்சம் கட்டணத்தில் சேர்த்துக் கொள்வதாக ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நிறுவனம் கடந்த ஆண்டு கவர்ச்சிகரமான விளம்பரம் வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன் ஜி.ஆர்.சாரதி (19), ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள பர்ஸ்ட்பாவ்லவ் (ஊஐதநபடஅயகஞய) மருத்துவப் பல்கலைக்கழகத்தில் படிக்க அந்த நிறுவனத்திடம் பல தவணைகளில் சுமார் ரூ.4 லட்சம் செலுத்தி 2015 அக்டோபர் 13-இல் ரஷியா சென்றுள்ளார்.
இதனிடையே, சாரதியைப் போல சுமார் 30 மாணவ, மாணவியர் ரஷியா சென்றுள்ளனர். ஆனால், அங்கு அந்த நிறுவனம் குறிப்பிட்ட மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சேர்க்காமல் சிறிய கட்டடத்தில் அடிப்படை வசதிகளின்றி இயங்கி வரும் டுடோரியல் சென்டரில் சேர்த்துள்ளனர். மேலும், சரிவர உணவு கொடுக்காமலும் கொடுமைப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. மேலும், அங்குள்ள ஏஜென்சி நிறுவனத்தில் உள்ளவர்களிடம் கேட்டபோது சரிவர பதில் அளிக்காமல் மாணவர்களை மிரட்டி வந்துள்ளனர். இந்த நிலையில், கன்னியாகுமரியைச் சேர்ந்த மருத்துவர் ரமேஷ்பாபு (31) என்பவரை சாரதி கடந்த ஜனவரியில் சந்தித்துள்ளார்.
அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அவரிடம் தெரிவித்துள்ளார். அதேபோல், அவரது நண்பர்களான தேனியைச் சேர்ந்த ராஜேஷ் (20), தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வைரமுத்து மற்றும் 3 மாணவிகளும் அந்த நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, ரமேஷ்பாபு உதவியுடன் அங்குள்ள இந்தியத் தூதரகம் மூலமாக பெற்றோர்களின் உதவியை நாடியுள்ளனர். பின்னர், 6 மாணவர்களின் பெற்றோரும் தலா ரூ.60 ஆயிரத்தை ரமேஷ்பாபுவின் வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளனர். இதையடுத்து, அந்த டுடோரியல் சென்டரில் தலா ரூ.12 ஆயிரம் செலுத்தி தங்களது பள்ளிச் சான்றிதழைப் பெற்றுக் கொண்டு கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி இந்தியா திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து கோவை மாநகர காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கோவை மாநகரில் செயல்படும் 5 வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு ஆள்களை அனுப்பி வருகிறது.
இது போன்ற மோசடிகள் குறித்து எங்களிடம் புகார் அளித்தால் தனியார் நிறுவனங்கள், ஏஜென்சிகள் உரிய அனுமதியுடன் செயல்படுகிறதா என்பதை அந்தப் பகுதிக்கு உள்பட்ட காவல் ஆய்வாளர்கள் மூலம் சோதனை நடத்தி, உரிய அனுமதியில்லாமல் செயல்படும் வேலைவாய்ப்பு நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க முடியும். அப்போது மட்டுமே இது போன்ற மோசடியில் இருந்து இளைஞர்களை விடுவிக்க இயலும் என்றார்.

No comments:

Post a Comment