Saturday, 26 March 2016

முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்... கூட்டணிக்குள் வலுக்கும் எதிர்ப்புகள்!

சென்னை: 

ஒரு வேகத்தில் விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராகவும், மநகூ - தேமுதுக அணியை விஜயகாந்த் அணி என்றும் வைகோ சொல்லிவிட்டாலும், அதை முழுமையாக ஏற்க முடியாமல் தவிக்கிறார்கள் மக்கள் நலக் கூட்டணியின் பிற தலைவர்கள்.
தமிழகத்தில் அதிமுக அல்லது திமுக இரண்டில் ஏதோ ஒரு கட்சியுடன்தான் கூட்டணி என்ற சூழல் நிலவிக் கொண்டிருந்த நேரத்தில், துணிச்சலாக மூன்றாவது மாற்று அணியை உருவாக்கினார் வைகோ. அதுதான் மக்கள் நலக் கூட்டியக்கம். பின்னர் மக்கள் நலக் கூட்டணியாக மாறியது.
இந்த அணிக்கு எதிராக அத்தனை கிண்டல்கள், கேலிகள், கலாய்ப்புகள். ஆனாலும் வைகோ தலைமையில் மிகச் சிறப்பாக மக்களைச் சந்தித்து ஆதரவைப் பெருக்கி வந்தனர் மநகூ தலைவர்கள். அதிமுக, திமுக, பாஜக போன்றவை கூட்டணி பற்றியே பேசிக் கொண்டிருந்த நேரத்தில், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் நான்கு கட்ட பிரச்சாரத்தையே முடித்துவிட்டனர். குறிப்பாக மதுரை, கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் மநகூ தலைவர்கள் கூட்டத்துக்கு வரலாறு காணாத வரவேற்பு.
நடுநிலையாளர்கள் பலரும் இது உண்மையிலேயே மாற்று அரசியலுக்கான அணி என்று நினைக்க ஆரம்பித்த நேரத்தில், தேமுதிகவை அணிக்குள் கொண்டுவந்தார் வைகோ. இதில் அவருடைய பங்களிப்புதான் அதிகம்.
ஒவ்வொரு தேர்தலின் போதும் கடைசி நேரத்தில் ஏமாற்றத்தைச் சந்தித்துக் கொண்டிருந்த வைகோ, 20 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலின் மையப் புள்ளியாகிவிட்டார். குறிப்பாக அவர் தந்திருக்கும் அதிர்ச்சியில் திமுக உறைந்து போயிருக்கிறது.
எல்லாம் சரிதான்... ஆனால் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தா? இந்தக் கேள்விதான் மநகூ மற்றும் அவர்களின் தீவிர ஆதரவாளர்களை ஜீரணிக்க முடியாமல் தவிக்க வைத்துள்ளது.
முதல்வர் வேட்பாளருக்கு முதல் சாய்ஸ் வைகோ. இல்லாவிட்டால் முதல் முறையாக ஒரு தலித் முதல்வர் என்ற வகையில் திருமாவளவன். இந்த இருவருமே வேண்டாம் என்றால், பெரியவர் நல்லக்கண்ணு என்ற நிலைதான் மக்கள் நலக் கூட்டணியில் இருந்தது. ஆனால் வலுவான கூட்டணி அமைய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ளனர் மநகூ தலைவர்கள்.
இந்த நிலைப்பாட்டை பொது வெளியிலும் இணைய வெளியிலும் கடுமையாக எதிர்த்துப் பேச ஆரம்பித்துள்ளனர் மநகூ ஆதரவாளர்கள்.
மக்கள் நலக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள நான்கு பிரதான கட்சிகளின் இரண்டாம் மட்ட தலைவர்கள், நிர்வாகிகள் இந்த விஷயத்தில் கடும் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர். கூட்டணியில் தேமுதிக வந்தது, அதிக தொகுதிகள் பெற்றதில் பிரச்சினையில்லை. ஆனால் முதல்வர் வேட்பாளராக வைகோ, திருமா அல்லது நல்லக்கண்ணுவை முன்னிறுத்தி இருந்தால் இந்தக் கூட்டணியின் மதிப்பும், வெற்றிக்கான வாய்ப்பும் மிகப் பிரகாசமாக இருந்திருக்கும் என பெரும்பான்மையானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேமுதிக இணைந்த மநகூவின் ஒருங்கிணைப்பாளர் வைகோவும், திருமாவளவனும் கூட இந்தக் கருத்தில் உடன்படுகின்றனர். 'ஆனால் வேறு வழியில்லை. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக இரண்டும் வரக்கூடாது. இந்த பொது இலக்கை நிறைவேற்ற சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டியதாகிவிட்டது. மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் தொண்டர்கள் இதையெல்லாம் யோசிக்காமல் அதிகாரம் நம் கைக்கு வருவதை லட்சியமாகக் கொண்டு செயல்பட வேண்டும்," என்று வைகோ வேண்டுகோள் விடுத்திருப்பது, இந்த அதிருப்தியை சமாளிக்கவே.

No comments:

Post a Comment