பட்டுக்கோட்டை உட்பட தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் செயல்படும் மின்னணு சேவை மையம் மூலம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் திரு.என்.சுப்பையன்.
இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:
தமிழ்நாடு அரசின் ஆணைப்படி முதன்முதலில் திருவையாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் பரிசோதனை அடிப்படையில் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் அமல்படுத்தப்பட்டது.
தொடர்ந்து திருவிடைமருதூர், பேராவூரணி, பூதலூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், பாபநாசம் ஆகிய வட்டங்களில் அமல்படுத்தப்பட்டது.
இதன் மூலம், தஞ்சாவூர் மாவட்டத்தில் இனி இணையவழி பட்டா மாறுதல் செய்து கொள்ளலாம்.
தொடக்கவேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள மின்னணு சேவை மையம், வட்டாட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மின்னணு சேவைமையம் ஆகிய இடங்களில் தனி பட்டா, கூட்டு பட்டா, உட்பிரிவு செய்து பட்டா மாறுதல் ஆகிய இனங்கள் தொடர்பாக மனு செய்யலாம்.
விண்ணப்பித்த 2 அல்லது 3 நாள்களில் ஆணை கிடைத்துவிடும். இத்திட்டத்தில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு இல்லை. பட்டா தயாராகிவிட்ட தகவல் விண்ணப்பதாரரின் செல்லிடப்பேசிக்கு அனுப்பப்படும். இதேபோல,மேல் முறையீடும் இணையவழியில் மேற்கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
No comments:
Post a Comment