வாஷிங்டன்: பஷார் அல் ஆசாத் அதிபர் பதவியில் இருந்து விலகும் வரை சிரியாவில் அமைதி இருக்காது என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் போர் நிறுத்தம் கொண்டு வருவது என்று அமெரிக்காவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளது. இது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமாவும், ரஷ்ய அதிபர் புதினும் தொலைபேசி மூலம் பேசி முடிவு செய்தனர். போர் நிறுத்தம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் ஒபாமா தேசிய பாதுகாப்பு குழுவுடன் வியாழக்கிழமை சிரியா குறித்து கலந்தாலோசித்தார். சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகும் வரை போராளிகள் தங்களின் போராட்டத்தை நிறுத்த மாட்டார்கள் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில் ஆசாத் பதவி விலகினால் மட்டுமே சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வந்து, மக்களை ஒன்று சேர்க்க முடியும். சிரியாவில் எப்பொழுதும் அமைதி நிலவ வேண்டும் என்று ஆசாத் நினைத்தால் அவர் பதவி விலக வேண்டும். சிரியாவில் 5 ஆண்டுகளாக நடக்கும் பிரச்சனையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் போர் நிறுத்தம் மூலம் இந்த பிரச்சனை தீருமா என்று பார்க்க வேண்டும். போர் நிறுத்தம் குறித்து பலரும் விமர்சிக்கலாம். ஆனால் சிரியாவில் நடக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண முயற்சிக்காவிட்டால் வரலாறு நம்மை கடுமையாக சாடும் என்றார். ஆசாத் பதவி விலக வேண்டும் என்று ஒபாமா ஏற்கனவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment