Posted by: 28, 2016,
சென்னை: பாஜக கூட்டணியில் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இன்னும் இரு தினங்களில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது சமத்துவ மக்கள் கட்சி. ஆனால், அதிமுக தங்களை வளரவிடவில்லை, கறிவேப்பிலையாக பயன்படுத்தியது என்ற பரபரப்புக் குற்றச்சாட்டுடன், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக கடந்தவாரம் அறிவித்தார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவரான சரத்குமார். அதனைத் தொடர்ந்து திமுக அல்லது பாஜகவுடன் அவர் கூட்டணி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்கு யாரும் தன்னை இதுவரை அணுவவில்லை என சரத்குமார் தெரிவித்திருந்தார். இந்நிலையில், சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை நேற்றிரவு சரத்குமார் நேரில் சந்தித்தார். அப்போது தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொதுச்செயலாளர் நரேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின்போது பாஜக கூட்டணியில் சேர சரத்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அதற்கு அவர் சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறாது. இது தொடர்பாக மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் மத்தியில் சரத்குமார் கூறுகையில், ‘பாஜகவினர் என் வீட்டுக்கு வந்து என்னை சந்தித்தார்கள். கூட்டணியில் சேருமாறு அழைத்தனர். கொள்கை அளவில் அதை ஏற்றுக்கொண்டேன். மற்ற விவரங்கள் 2 நாளில் பேசி முடிவு செய்வோம். அதன்பிறகு அதிகாரப்பூர்வமாக கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்' என்றார். புதிய நிர்வாகிகள் அறிவிப்பு: இதற்கிடையே, சமத்துவ மக்கள் கட்சியின் புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பை சரத்குமார் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தென் சென்னை கிழக்கு மாவட்ட நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென் சென்னை தெற்கு மாவட்டத்திற்கு த.பொன்ராஜ் மாவட்ட செயலாளராகவும், தென்சென்னை கிழக்கு மாவட்டத்திற்கு எம்.எம்.ஆர்.மதன் மாவட்டச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதிச் செயலாளர்களாக சோழிங்கநல்லூர் தொகுதிக்கு எஸ்.நாராயணன், ராயபுரம் தொகுதிக்கு கே.விஜயன், திருவொற்றியூர் தொகுதிக்கு ஆர்.கோட்டீஸ்வரன், மாதவரம் தொகுதிக்கு எம்.பாலசுப்பிரமணி, வில்லிவாக்கம் தொகுதிக்கு எம்.ஏ.ஆண்டனி, தி.நகர் தொகுதிக்கு கே.ஆர். குணசேகரன், பல்லாவரம் தொகுதிக்கு பி.எஸ்.முருகேசன் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்'' என்று கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment