அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவரின் ஆட்சியை அமல்படுத்தியது,மத்திய பா.ஜ.க அரசின் அப்பட்டமான சட்ட மீறல் என்றும், ஜனநாயகத்தை சாகடிக்கும் செயல் என்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் சர்புதீன் அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவரின் ஆட்சியை மோடி அரசாங்கம் திணித்திருப்பது இணக்கமான கூட்டாட்சி தத்துவத்தை நிலைநிறுத்தும் உறுதிமொழிக்கு எதிரானது. அருணாச்சல பிரதேசத்தில் தோன்றியுள்ள அரசியல் சாசன பிரச்சனை குறித்து, உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்குவதற்கு முன் அவசர அவசரமாக உள்நோக்கத்தோடு ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் ஆட்சி நடைபெறவிடாமல் மக்களின் உரிமைகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அங்கே வலது சாரி ஆர்.எஸ்.எஸ் ஆளுநரும் திணிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்துள்ளது.
மத்தியில் உள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின்பால் மரியாதை இல்லாதது துரதிஷ்டவசமானது. பதவி பசி பிடித்திருக்கும் மத்திய அரசு, ஊறிப்போன ஊழல், சமூக வெறி, தலித் எதிர்ப்பு, சிறுபான்மையினர் விரோதம் போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. இந்த ஜனநாயக படுகொலைக்கு எதிராக அரசியல் சட்டத்தின் பாதுகாவலான உச்ச நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மத்திய அரசு தன்னை சட்டத்திற்கும் மேலான அமைப்பாக கருதுகிறது. அதனால் தான் நீதிபதிகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையில் தேசிய நீதித்துறை நியமன கமிஷனை அமைக்க முயன்று அதில் படுதோல்வியடைந்தது.
நீதிபதிகள் நியமனத்திற்கு அருணாச்சல பிரதேசம் அரசியல் ரீதியில் முக்கியமான பிராந்தியம். அந்த மாநிலத்தில் மூன்றில் இரண்டு பகுதியை சீனா உரிமை கொண்டாடி வருகிறது. எந்த நேரத்திலும் நாகா இனப் போராளிகளின் தாக்குதல்கள் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. அந்த மாநிலத்தின் ஸ்திர தன்மைக்கு அரசியல் ஸ்திர தன்மையின்மை ஏற்படுவது சரியானது அல்ல. ஒரு எல்லைப் பகுதி மாநிலத்தில் அரசியல் ரீதியாகவோ, சட்டம் ஒழுங்கு ரீதியாகவோ ஸ்திர தன்மை பாதிக்கப்படுவது நல்லதல்ல. இந்தியாவில் நடைபெறம் நிகழ்வுகளை சீன அரசு மிக நெருக்கமாக கண்காணிக்கிறது. இந்தியா ஒரு திறந்த புத்தகமாகவே திகழ்கிறது. ஆனால் சீனாவின் நடைபெறும் நிகழ்வுகள் குறித்து இந்தியா கண்டுகொள்ளவில்லை.
இந்தியாவில் ஆளுநர்கள் நியமனம் ஒரு கேலிக்கூத்தாகவே நடைபெற்று வருகிறது. மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனத்தில் தீவிர சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். முதன்மையாக ஆளுநராக நியமனம் செய்யப்படுபவர் அரசியல் சார்ந்தவராக இல்லாமல். ஓய்வுபெற்ற நீதிபதியாகவோ அல்லது ஓய்வுபெற்ற ராணுவ உயர் அதிகாரியாகவோ இருக்க வேண்டும். செயலாக்கம் மற்றும் செயலாக்கமின்மை ஆகியவற்றால் மத்திய அரசு அரசியல் சட்ட தவறுகளை இழைப்பதற்கு எதிராகவும் கூட்டாட்சி தத்துவத்தை நிறைவேற்றுவதற்கும் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment