Saturday, 20 February 2016

எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கினார் விஜயகாந்த்.


தேமுதிக மாநில மாநாடு காஞ்சிபுரத்தில் இன்று மாலை நடைபெற உள்ளது. இதில் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்க மாட்டேன் என்று அக்கட்சியின் தலைவர்  விஜயகாந்த் கூறியுள்ளார்.
தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஜயகாந்த் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் இன்று மாலை நடைபெறும் தேமுதிக  மாநில மாநாட்டில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூட்டணி குறித்து அறிவிப்பினை வெளியிடுவாரா என்று பல தரப்பினரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.
இந்த நிலையில், அவர் கூட்டணி குறித்து அறிவிக்க மாட்டேன் என்று கூறியிருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
தற்போது திமுக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துள்ளன. தவிர, அதிமுக தலைமையில் ஓர் அணியும், மதிமுகவின் ஒருங்கிணைப்பில் மக்கள் நலக் கூட்டணியும், பாமக தனியாகவும் களத்தில் உள்ளன.
இந்நிலையில், தேமுதிகவை தங்கள் பக்கம் சேர்த்து ஒரு வலுவான கூட்டணியை அமைக்க பாஜக முயன்று வருகிறது. திமுகவும் மக்கள் நலக் கூட்டணியும் தங்கள் அணிக்கு வருமாறு தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்து வருகின்றன. ஆனால், இதுவரை விஜயகாந்த் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், தேமுதிக மாநில மாநாடு காஞ்சிபுரத்தை அடுத்த வேடலில் இன்று மாலை நடைபெறுகிறது.
"தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு' என்று இம் மாநாட்டுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. "துணிந்திடு, தவறுகளைக் களைந்திடு, புதிய மாற்றுத்துக்கான ஆரம்பம்' ஆகிய கோஷங்கள் அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளன.
இம் மாநாடு திருப்புமுனையை ஏற்படுத்துமா, அல்லது வழக்கமான சம்பிரதாய மாநாடாக இருக்குமா என்பது அக் கட்சியின் தலைவர் விஜயகாந்தின் அறிவிப்பில்தான் உள்ளது. எது எப்படியோ, அரசியல் பார்வையாளர்களின் கவனம், காஞ்சிபுரத்தில் இன்று நடைபெற உள்ள தேமுதிக மாநாட்டை நோக்கித் திரும்பியிருப்பது உண்மை.

No comments:

Post a Comment