Saturday, 20 February 2016

மது அருந்தி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவிகள்... புதுச்சேரி அவலம்!


புதுச்சேரி: அரசு பள்ளி மாணவிகள் குளிர் பானத்தில் மதுவை கலந்து குடித்து வகுப்பறையில் மயங்கி விழுந்த சம்பவம் புதுச்சேரியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சில மாணவிகள், வகுப்பு நடந்து கொண்டு இருக்கும் நேரத்தில் தாங்கள் கொண்டு வந்திருந்த குளிர்பான பாட்டிலை எடுத்து அருந்தியது மட்டுமல்லாமல் வகுப்பில் இருந்த சக மாணவிகளுக்கும் குடிக்கக் கொடுத்துள்ளனர். குளிர்பானத்தை குடித்த மாணவிகள், அடுத்த சில நிமிடங்களில் போதை தலைக்கு ஏற, வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளனர்.
இதை கண்ட வகுப்பு ஆசிரியர் பதறிப்போய் சக மாணவியரிடம் விசாரித்ததில்,  மது போதை மயக்கத்தில் அம்மாணவிகள் மயங்கி விழுந்துள்ளதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார். உடனே இச்சம்பவம் பற்றி அந்த ஆசிரியர், பள்ளி முதல்வரிடம் தெரிவித்திருக்கிறார்.
முதல்வர், சில ஆசிரியர்களுடன் சேர்ந்து அந்த மாணவிகளின் மயக்கத்தை தெளிய வைத்து இருக்கின்றனர். அதன்பின் அந்த மாணவிகளை அவர்கள் தனியே அழைத்து சென்று விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
அப்போது, ஐந்து மாணவியர் குளிர்பானத்தில் மது கலந்து அருந்தியது தெரியவந்திருக்கிறது. உடனே பள்ளி முதல்வர், அந்த மாணவிகளின் பெற்றோர்களுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்து, உடனே பள்ளிக்கு வந்து தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல சொல்லி இருக்கின்றனர்.
தற்போது, இந்தச் சம்பவம் தொடர்பாக, கல்வித்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பள்ளி மாணவியர்களுக்கு மது எங்கிருந்து கிடைத்தது? அவர்களுக்கு மதுவை வாங்கி கொடுத்தது  யார்? என்றெல்லாம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களிடம் பரவி வந்த இக்கொடிய பழக்கம், தற்போது மாணவிகளிடமும் பரவி வருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
சு.கற்பகம்
(மாணவப் பத்திரிகையாளர்)

No comments:

Post a Comment