Tuesday, 2 February 2016

சமூகவலை தளங்களில் வெளியான படம்: தேசியக்கொடியை எரித்த வாலிபர் சென்னையில் கைது



ராயபுரம்,
தேசியக்கொடியை ஒருவர் எரிப்பது போன்ற படம் சமூகவலை தளங்களில் வெளியானது. இதையடுத்து அந்த வாலிபரை போலீசார் சென்னையில் கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தேசியக்கொடி எரிப்பு
பேஸ்புக், வாட்ஸ்–அப் போன்ற சமூகவலை தளங்களில் வாலிபர் ஒருவர் தேசியக்கொடியை தீயிட்டு எரிப்பது போன்ற படங்கள் சில நாட்களுக்கு முன்பு பரவியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் நாராயணன் புளியந்தோப்பு போலீசில், தேசியக்கொடியை எரித்து அதனை சமூகவலை தளங்களில் பரப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் செய்தார்.புகாரை பெற்று கொண்ட போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் திலீபன் என்ற வாலிபர் தேசியக்கொடியை எரித்து சமூகவலை தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து துணை கமிஷனர் மயில்வாகனன் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த வாலிபரை போலீசார் தேடிவந்தனர்.கைது
இந்நிலையில் தேசியக்கொடியை எரித்த படத்தில் உள்ள வாலிபர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு பதுங்கி இருந்த திலீபனை கைது செய்தனர்.போலீசார் விசாரணையில், அவர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் என்பதும், அவருடைய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தில் உறுப்பினராக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், திலீபனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment