சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பேச்சிலிருந்து தெரிய வருவது.. திமுக, பாஜக மற்றும் மக்கள் நலக் கூட்டணிக்கு இன்னும் கால அவகாசம் கொடுத்து தனது "பேரத்திற்கான" பலத்தை அதிகரித்துக் கொண்டுள்ளார் என்பதே. விஜயகாந்த் கூட்டணி குறித்து நிச்சயம் தெரிவிக்க மாட்டார் என்பது விஷயம் அறிந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவரது இந்த காஞ்சிபுரம் மாநாட்டின் நோக்கமே, அவரது "டார்கெட்" கட்சிகளுக்கு "மெசேஜ்" கொடுக்கத்தான். இன்றைய மாநாட்டில் விஜயகாந்த் பேச்சிலிருந்து அவர் சொல்ல விரும்பும் செய்தியை நாம் இப்படி உணர்ந்து கொள்ள முடியும் அதிமுகவையும், முதல்வர் ஜெயலலிதாவையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசியதன் மூலம் அதிமுக எதிர்ப்பு வீரியத்தை அதிகரித்துள்ளார் விஜயகாந்த். இதன் மூலம் விஜயகாந்த்துக்கும், தேமுதிகவுக்கும் சாதகமாக அதிமுக எதிர்ப்பு வாக்குகள் திரும்பும் என்பதும் தேமுதிகவின் எதிர்பார்ப்பு. தேமுதிகவின் இந்த எதிர்பார்ப்புக்கு ஓரளவு பலனும் கிடைக்கும் வாய்ப்புண்டு. அதே நேரத்தில் இந்த மாநாட்டில் தொண்டர்களை நோக்கி யாருடன் கூட்டணி என்ற கேள்வியையே தவிர்த்துவிட்டு, நான் கிங்காக இருக்க வேண்டுமா அல்லது கிங் மேக்கராக இருக்க வேண்டுமா என்று கேட்டு, அதாவது கூட்டணி வைக்கலாமா இல்லையா என்பது போன்ற கேள்வியைக் கேட்டு, அதற்கு தொண்டர்கள் கிங்காக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தபடியே கோஷமிட்டதும், பார்த்தீங்களா என் தொண்டர்கள் என்ன சொல்கிறார்கள் என்று சொல்லி, தன்னைக் கூட்டணியில் சேர்க்கத் துடிக்கும் கட்சிகளுடன் பேரம் பேசுவதற்கான பலத்தை அதிகரித்துக் கொண்டுள்ளார் விஜயகாந்த். திமுக தரப்பு விஜயகாந்த்துக்கு 55 தொகுதிகள் வரை தரத் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது இதை 85 தொகுதிகள் வரை விஜயகாந்த் கூட்டிக் கேட்கலாம். பாஜகவுக்கு "கேப்டன்" விடுத்துள்ள செய்தி என்னவென்றால் முதல்வர் வேட்பாளராக என்னை அறிவியுங்கள் + அவர் கேட்கும் இதர விஷயங்கள். இதர விஷயங்களை தேமுதிக தரப்பு இப்போது கூடுதலாக கேட்க வாய்ப்புண்டு. மக்கள் நலக் கூட்டணியைப் பொறுத்தவரை யாரையும் முதல்வர் வேட்பாளராக அறிவிக்க விரும்பவில்லை. ஆனால் தற்போது தன்னை கிங்காக (முதல்வர் வேட்பாளராக) வைகோவும், திருமாவளவனும், இடதுசாரிகளும் அறிவித்தால்தான் வருவேன் என்பதை சொல்லாமல் சொல்லி விட்டார் விஜயகாந்த். விஜயகாந்த் தனது நிலைப்பாட்டை 'தெளிவாக' சொல்லி விட்டார்.. அவரை விரும்பும் கட்சிகள்தான் இனி முடிவெடுக்க வேண்டும். நானே கிங் என்று விஜய்காந்த் இன்று எடுத்துள்ள நிலைக்கும் ஜெயலலிதாவின் ஆட்சியை விரட்டுவேன் என்ற அவரது நிலையும் ஒன்றுக்கு ஒன்று முரணானவை. ஜெயலலிதாவை வீழ்த்த வேண்டுமானால் அவர் பலமான எதிர் தரப்புடன் கூட்டணி சேர்ந்தே ஆக வேண்டும். தனிப்பட்ட முறையில் விஜய்காந்த்துக்கு 10 சதவீத ஓட்டு இருப்பதாக வைத்துக் கொண்டாலும் தனித்து "கிங்" என்று போட்டியிட்டால் அவரால் அதிமுகவை எப்படி வீழ்த்த முடியும் என்பது தேமுதிக தொண்டர்களுக்கே எழும் சந்தேகம். ஆக, "கிங்" என்று சொல்லிக் கொண்டு அனைத்துத் தரப்பையும் அவர் குழப்புவதின் பின்னணியில் இருப்பது தனது bargaining power- யை (பேரம்) அதிகரித்துக் கொள்வதற்கே.... விஜய்காந்தின் கடந்த கால வரலாற்றின்படி கடைசி நேரத்தில், தனக்கு "வேண்டிய" விஷயங்கள் நடந்த பின், முடிவெடுப்பதே வழக்கம். அதையே இந்த முறையும் செய்வார். அவர் என்ன செய்வார் என்பது திமுக, பாஜக, ம.ந.கூ ஆகியவை தேமுதிகவின் கோரிக்கைகைகளை எந்த அளவுக்கு ஏற்கின்றன என்பதைப் பொறுத்தே அமையும்.
No comments:
Post a Comment